சங்கத்தை மீறி படப்பிடிப்பு நடத்தும் விஜய்சேதுபதி! சலசலப்பில் தயாரிப்பாளர் சங்கம்
- IndiaGlitz, [Thursday,March 22 2018]
கோலிவுட் திரையுலகம் ஒட்டுமொத்தமாக இணைந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை, உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பு இல்லை, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இல்லை என முழு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஸ்டிரைக் எப்போது முடியும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாத நிலையில் விஜய்யின் 'தளபதி 62' உள்பட ஒருசில படங்களுக்கு மட்டும் ஒருசில நாட்கள் விதிவிலக்கு அளித்து படப்பிடிப்புக்கு அனுமதிக்கப்பட்டது
இந்த சிறப்பு அனுமதிக்கு முன்னணி நடிகர், தயாரிப்பாளர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர். ஸ்டிரைக்கின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் சங்கமே இவ்வாறு நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது
இந்த நிலையில் நேற்று நடந்த தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் திரையுலகினர் வேலைநிறுத்தம் எப்போது முடியும் என்று காத்திருக்கின்றனர்
இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து தயாரித்து வரும் ஜூங்கா படக்குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக போர்ச்சுக்கல் நாட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்சேதுபதி , சாயிஷா, இயக்குனர், ஒளிப்பதிவாளர் உள்பட படக்குழுவினர் அனைவரும் போர்ச்சுக்கல் சென்றிருப்பதாகவும், அங்கு அவர்கள் 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் தயாரிப்பாளர் சங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜூங்கா படக்குழுவை அடுத்து இன்னும் சில படங்களின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும், ஒருசில தயாரிப்பாளர்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுவதால் ஸ்டிரைக் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.