விஜய்சேதுபதியின் 'கருப்பன்' திரைமுன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த ஜனவரி மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சென்னை மெரீனாவில் நடத்திய உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றதில் இருந்தே தமிழ் திரையுலகினர்களின் பார்வை ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பியுள்ளது. தற்போது ஜல்லிக்கட்டு குறித்து உருவாகி வரும் சுமார் அரைடஜன் படங்களில் ஒன்று விஜய்சேதுபதியின் 'கருப்பன்'. வரும் 29ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்
'ரேணிகுண்டா' இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, தான்யா, கிஷோர், பசுபதி, சிங்கம்புலி உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து விஜய்சேதுபதி கூறியபோது, 'இது ஒரு கமர்சியல் படம். எனக்காக பாபி சிம்ஹாவும் இதில் நடித்திருக்கிறார். பெரிய மீசை வைத்து நடித்திருக்கிறேன். மாடு பிடி காட்சிகளுடன் என்னையும் இணைத்து அழகாக படமாக்கி இருக்கிறார்கள்' என்று கூறியுள்ளார்.
தான்யா கூறும்போது, “மதுரை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் மதுரை பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறேன். எனது நடிப்பை வெளிப்படுத்த இந்த படம் நல்ல வாய்ப்பாக அமைந்தது” என்று தெரிவித்தார்.
ஏ.எம்.ரத்னம், “இது பன்னீர்செல்வம் இயக்கத்தில் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது. டி.இமான் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும்” என்று கூறினார்.
இந்த படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் இந்த படம் குறித்து கூறியபோது, 'நான் பேருந்திற்காக காத்திருந்து தளர்ந்து போன சமயத்தில் எனக்கு ஏசி பஸ்ஸே கிடைத்திருக்கிறது. ஓட்டுநராக விஜய் சேதுபதியும், நடத்துநராக ரத்னம் சாரும் வந்து அமைந்தது என் பாக்கியம்.
'கருப்பன்' கதையை வைத்துக் கொண்டு பல்வேறு நடிகர்களிடம் சென்றேன். பலரும் கதையைக் கேட்பதற்கே தயாராக இல்லை. ஒரு நாள் சீனு ராமசாமி போன் செய்து, இக்கதை விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக இருக்குமா எனக் கேட்டார். கச்சிதமாக இருக்கும் என்றவுடன் நாளைக்கு வருமாறு சொன்னார். அப்போது 'தர்மதுரை' டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதல் சந்திப்பிலேயே 'ரேணிகுண்டா' படத்தின் பாடல்களை தற்போதும் கேட்டு வருவதாக விஜய் சேதுபதி கூறினார். அதனைத் தொடர்ந்து முழுக் கதையையும் கூறி, படம் தொடங்கப்பட்டது.
பலரும் இயக்குநர்களிடமிருந்து கற்றுக் கொண்டதாக கூறுவார்கள். ஆனால், இப்படத்தில் விஜய் சேதுபதியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பல நடிகர்களோடு பணிபுரிந்திருக்கிறேன், ஆனால் விஜய் சேதுபதி போன்று கதையில் முழு கவனமும் கொண்ட நடிகரைப் பார்த்ததில்லை. இப்படம் ஜல்லிக்கட்டுப் பிரச்சினைக்கு முன்பே தொடங்கப்பட்டது. இப்படத்துக்கு ஜல்லிக்கட்டும் சம்பந்தமில்லை.
டி.இமான் இசையில் ஐந்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். ஏற்கனவே ஐந்து பாடல்களும் ஹிட் என்றாலும் 'கருவா கருவா பயலே' பாடல் அனைத்து எப்.எம். வானொலிகள் உள்பட பட்டிதொட்டியெங்கும் ஹிட்டகியுள்ளது.
கவண்', 'விக்ரம் வேதா' என தொடர் வெற்றிகளை இந்த ஆண்டு பெற்று வரும் விஜய்சேதுபதிக்கு மீண்டும் ஒரு வெற்றியை 'கருப்பன்' தருவான்' என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அந்த நம்பிக்கையுடன் இந்த படத்தின் விமர்சனத்தோடு வரும் வெள்ளியன்று சந்திப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments