அன்று சாதாரண ஊழியர், இன்று நாட்டின் கெளரவம்: 22 ஆண்டுகளில் விஜய்சேதுபதி வாழ்வின் மாற்றம்!
- IndiaGlitz, [Thursday,March 03 2022]
கடந்த 2000ம் ஆண்டில் நடிகர் விஜய்சேதுபதி ஊழியராக இருந்த நாட்டில் இன்று மிகப்பெரிய கவுரவம் கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கு ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசா வழங்கி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். ஏற்கனவே திரையுலகை பார்த்திபன் ஷாருக்கான், அமிதாப்பச்சன், மோகன் லால், மம்முட்டி, டோவினோ தாமஸ், துல்கர் சல்மான், தயாரிப்பாளர் போனி கபூர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிருத்விராஜ், அமலா பால், லஷ்மி ராய், பாடகி சித்ரா, காஜல் அகர்வால் உள்பட பலருக்கும் கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் நாடு வழங்கியுள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதிக்கும் தற்போது ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாவை அளித்துள்ளது. துபாயில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் கோலடன் விசாவை பெற்று கொண்ட பின் பேசிய விஜய் சேதுபதி, ’நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நான் பெரிய லட்சியங்களுடன் 2000ம் ஆண்டு துபாய்க்கு வந்தேன். இங்கு வந்த பிறகு வெளிநாடாக உணராமல் எனது இரண்டாவது தாயகமாக உணர்ந்தேன், பிறகுதான் நான் சென்னைக்கு சென்று சினிமாவில் நடித்து பெரிய நடிகர் ஆனேன். ஒவ்வொரு முறை துபாய்க்கு வரும்போதெல்லாம் நான் முன்பு வேலை பார்த்த பகுதியில், வசித்த பகுதியை சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன் என்று கூறினார்
2000 ஆண்டு துபாயில் சாதாரண ஊழியராக பணி செய்த விஜய் சேதுபதி இன்று அந்த நாட்டின் கெளரவமிக்க கோல்டன் விசாவை பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.