துப்புரவுப் பணியாளர்கள் குறித்த படத்துக்கு விஜய் சேதுபதி செய்த பெரிய உதவி
- IndiaGlitz, [Monday,July 24 2017]
மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள 'விக்ரம்-வேதா' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்துள்ளது. முதல் நாள் வசூலை விட சனி, ஞாயிறு வசூல் பிரமாதமாக இருந்ததாகவும், பல திரையரங்குகள் ஹவுஸ்புல் ஆனதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி என்பவர் 'விக்ரம் வேதா' படத்தில் விஜய்சேதுபதியின் நடிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை பேஸ்புக்கில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் மனிதக் கழிவுகளை நீக்கும் துப்புரவுப் பணியாளர்கள் பற்றிய ஆவணப் படத்தை இயக்கியவர். அடித்தட்டு மக்களுக்கான பல்வேறு போராட்டங்களிலும் இயக்கங்களிலும் பங்கேற்றவர்.
பல ஆண்டுகளாக மாதவன் தனது கனவு நாயகனாக இருந்தபோதும் இந்த படத்தை பொருத்தமட்டில் விஜய்சேதுபதியின் நடிப்பு அபாரமாக இருந்ததாகவும், மாதவனின் அறிமுக காட்சியை விட விஜய்சேதுபதியின் அறிமுக காட்சியில் தியேட்டரில் விசில் பறந்ததாகவும் கூறியுள்ளார். திரையில் அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு சிறு அசைவையும் ரசிகர்கள் ரசித்து வருவதாகவும், அவர் இயல்பாவே என்னமோ செய்றார் என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதோடு திவ்யபாரதி தெரிவித்திருக்கும் மற்றொரு தகவல் விஜய் சேதுபதிக்கு இருக்கும் சமூகப் பொறுப்பை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ட்ரைலரைப் பார்த்துவிட்டு திவ்யாவை தொலைபேசியில் அழைத்துப் பேசிய விஜய் சேதுபதி,துப்புரவுப் பணி அரசியல் பற்றி நீண்ட நேரம் பேசியதோடு இந்த ஆவணப்படத்துக்குத் தான் ஏதாவது வகையில் உதவ வேண்டும் என்று விரும்பினாராம். இறுதியில் கக்கூஸ்' படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்த ஸ்டூடியோவுக்கு ரூ.30,000 வாடகைப் பணத்தை விஜய் சேதுபதிதான் செலுத்தினாராம்.
இதன் மூலம் விஜய் சேதுபதி ஒரு தலை சிறந்த நடிகர் மட்டுமல்ல, போற்றத்தக்க பண்புகளை உடைய மனிதர் என்பது உறுதியாகிறது.