பேனர் விவகாரம்: சூர்யா, தனுஷ் ரசிகர்களை மிஞ்சிய விஜய்சேதுபதி ரசிகர்கள்
- IndiaGlitz, [Saturday,October 05 2019]
பேனர் கலாச்சாரத்தால் சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ மரணம் அடைந்த நிலையில் இந்த மரணத்திற்கு பின் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல்வாதிகளும், மாஸ் நடிகர்களும் அறிவித்தனர். இனிமேல் தங்களுடைய படம் வெளியாகும்போது பேனர் வைக்க வேண்டாம் என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுமே தங்களுடைய ரசிகர்களுக்கு அறிவுறுத்தினர்
இந்த நிலையில் சமீபத்தில் சூர்யாவின் ‘காப்பான்’ திரைப்படம் வெளியானபோது பேனர் வைப்பதற்கு பதிலாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அவரது ரசிகர்கள் ஹெல்மெட்டுக்களை இலவசமாக அளித்தனர். அதேபோல் தனுஷின் ‘அசுரன்’ திரைப்படம் வெளியானபோது, அவரது ரசிகர்கள் திருநங்கைகளுக்கு தையல் மிஷின்களை கொடுத்து உதவினர்
இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் ஒரு விவசாயியின் நிலத்தில் நெல் பயிரிடுவதற்கு தேவையான செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த பிரகாஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடும் அனைத்து செலவுகளையும் விஜய்சேதுபதி ரசிகர்கள் ஏற்றுள்ளதால் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது