நன்றியை மறக்காத விஜய்சேதுபதி. தர்மதுரை படத்தின் உணர்ச்சிமிகு பிரஸ்மீட்

  • IndiaGlitz, [Thursday,August 04 2016]

பொதுவாக திரையுலகில் பழசை நினைத்து பார்த்து தன்னை தூக்கிவிட்டவர்கள் கஷ்டப்படும்போது உதவி செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களே. அந்த வகையில் ஒருவர்தான் நமது விஜய்சேதுபதி என்பது சமீபத்தில் நடந்த பிரஸ்மீட் உணர்த்தியுள்ளது.
சிறுசிறு வேடங்களிலும், வில்லன் வேடத்திலும் நடித்து கொண்டிருந்த விஜய்சேதுபதியை 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் சீனுராமசாமி. அவர் இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஒருசில பிரச்சனைகளால் வெளிவர முடியாமல் இருந்த போது அவருக்கு தனது கடுமையான பிசியிலும் கால்ஷீட் கொடுத்து கைதூக்கிவிட்டவர் விஜய்சேதுபதி. இதை சீனுராமசாமி 'தர்மதுரை' படத்தின் பிரஸ்மீட்டில் பெருமையுடன் கூறினார்.
'தர்மதுரை' பிரஸ்மீட்டில் சீனு ராமசாமி கூறியபோது, 'அப்பாக்கள் பிள்ளைகளை கை பிடித்து அழைத்துக் கொண்டு போய் கிரவுண்டுக்குள் இறக்கிவிடுவார்கள். குழந்தை வளர்ந்து அப்பாவை கை பிடித்து அழைத்துச் சென்று கிரவுண்டுக்குள் இறக்கிவிட்டால் எப்படியிருக்கும்? அப்படியிருக்கிறது எனக்கு. நான் இயக்கிய இடம் பொருள் ஏவல்' படம் வெளிவராமல் நின்று விட்டது. இந்த நேரத்தில் என்னை அழைத்து இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. இன்று அவர் இருக்கும் உயரத்திற்கு என்னை நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியமேயில்லை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய விஜய்சேதுபதி, 'நான் சினிமாவில் ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா? என்று கஷ்டப்பட்டு கொண்டிருந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்தவர்தான் சீனுராமசாமி. எனக்கு மட்டுமின்றி என் மனைவிக்கும் தைரியம் கூறி கண்டிப்பாக ஒருநாள் நான் நல்ல நிலைமைக்கு வருவேன்' என்று ஆசி வழங்கியதோடு அவ்வப்போது எனக்கு பண உதவியும் செய்தவர்' என்று நினைவு கூர்ந்தார்.
மொத்தத்தில் இந்த நிகழ்ச்சி தர்மம் செய்தால் தான் தர்மதுரை என்றில்லாமல் நன்றியை மறக்காமல் இருப்பவர்களும் 'தர்மதுரை'தான் என்பதை அனைவருக்கும் உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.