விஜய்சேதுபதி தத்தெடுத்த ஆர்த்தி-ஆதித்யா யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Monday,March 04 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி திரைப்பட நடிகர் மட்டுமின்றி சமூக சேவையிலும் அக்கறை உள்ளவர் என்பது பல நிகழ்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதி ஆர்த்தி-ஆதித்யா என்ற இரண்டு புலிகளை தத்தெடுத்துள்ளார்.

சென்னை வண்டலூர் விலங்கியல் பூங்காவில் இருக்கும் அரிய வகை விலங்கினமான வெள்ளைப்புலிகள் ஆர்த்தி-ஆதித்யா ஆகிய இரண்டு விலங்குகளையும் தத்தெடுத்த விஜய்சேதுபதி அந்த புலிகளின் பராமரிப்புக்காக ரூ.5 லட்சத்தை விலங்கியல் பூங்காவின் இயக்குனரிடம் அளித்துள்ளார்.

தனது நண்பர் ஒருவரின் மூலம் விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்களை தத்தெடுக்கும் முறையை தெரிந்து கொண்டதாகவும், இதனையடுத்து இரண்டு புலிகளை தற்போது தத்தெடுத்துள்ளதாகவும், வரும் காலத்தில் இன்னும் சில விலங்குகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் விஜய்சேதுபதி கூறினார்.

இதுகுறித்து விலங்கியல் பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங் கூறியபோது, 'புலி உள்பட ஒருசில விலங்குகளை பராமரிக்க தினமும் ரூ.2000 செலவாகி வருவதாகவும், விஜய்சேதுபதி போல் இன்னும் பலர் தங்களுக்கு விருப்பப்பட்ட விலங்கினங்களை தத்தெடுக்க நிதி தந்து உதவுமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட பலர் தற்போது இந்த பூங்காவிற்கு நிதியுதவி செய்து வருவதாகவும்ம் விஜய்சேதுபதியின் இந்த தத்தெடுப்பு செய்திக்கு பின் பலர் நிதியுதவி செய்ய வருவார்கள்' என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.