பிரபல இயக்குனர் மகன் இயக்கும் முதல் படத்தில் விஜய்சேதுபதி-டாப்ஸி

  • IndiaGlitz, [Sunday,August 23 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ராஜாதி ராஜா’ விஜயகாந்த் நடித்த ’அம்மன் கோயில் கிழக்காலே’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் சுந்தரராஜன். இவர் கடந்த சில ஆண்டுகளாக நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் என்பவர் இயக்கும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே இயக்குனர் விஜய்யிடம் உதவி இயக்குநராக சில ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் முக்கிய வேடத்தில் டாப்ஸி நடிக்க உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட இந்த படத்தில் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

செப்டம்பர் முதல் ஜெய்ப்பூரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், ஒரே கட்டமாக இந்த படப்பிடிப்பு முழுவதையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் கூறப்படுகிறது.

ஏற்கனவே தமிழில் 9 படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, இந்தி தெலுங்கு உட்பட ஒரு சில மொழிகளில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.