ஆண்டவன் கட்டளை- திரை விமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
“It is not only good to be intelligent. It is also intelligent to be good. “- Mahatma Gandhi
புத்திசாலியாக இருப்பது நல்லது மட்டுமல்ல, நல்லவனாக இருப்பது புத்திசாலித்தனம் ஆகும்- மகாத்மா காந்தி
நல்லவனாக இருப்பது உண்மை பேசுபவனாக, நேர்மையானவனாக இருப்பது என்று ஏற்றுக்கொண்டால் நம் தேசத் தந்தையின் இந்தக் கூற்றை ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் பிரச்சார நெடியில்லாமலும் சொல்லியிருக்கும் படம்தான் மணிகண்டனின் ஆண்டவன் கட்டளை`.
இது மணிகண்டனின் மூன்றாவது படம். முதல் படத்திலிருந்து இரண்டாவது படம் எப்படி முற்றிலும் வேறுபட்டிருந்ததோ அதேபோல் முதல் இரண்டு படங்களிலிருந்து இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அதே போல் மணிகண்டனின் முதல் இரண்டு படங்களிலிருந்து, படத்தின் நீளம் உட்ப்ட (150 நிமிடங்கள்) பல்வேறு வகைகளில் வேறுபட்டிருக்கிறது ஆண்டவன் கட்டளை`.
மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து கடன் தொல்லையிலிருந்து விடுபட லண்டனுக்குப் போய் வேலைபார்த்து வாழ்வில் முன்னேறலாம் என்ற கனவுடன் சென்னைக்கு வருகின்றனர் காந்தி (விஜய் சேதுபதி) மற்றும் பாண்டி (யோகி பாபு). வந்த இடத்தில் போலி சான்றிதழ்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நிறுவனத்தின் மூலம் லண்டனுக்குப் போக முயற்சிக்கிறார்கள்,
திருமணம் ஆனவர் என்று சொன்னால் பாஸ்போர்ட் எளிதாகக் கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தை நடத்துபவர் சொன்னதைக் கேட்டு கார்மேகக் குழலி என்ற கற்பனைப் பெயரை, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மனைவி பெயர் என்ற இடத்தில் போடுகிறார்.
பாண்டிக்கு விசா கிடைத்துவிட காந்திக்குக் கிடைக்கவில்லை. அதனால் அவர் சென்னையில் ஒரு நாடகக் குழுவில் அக்கவுண்டண்ட்டாக வேலைக்குச் சேர்கிறார். அந்தக் குழுவினருடன் லண்டனுக்குப் போகும் வாய்ப்பு கிடைக்கிறது.
இப்போது காந்திக்குத் தனது பாஸ்போர்ட்டில் பொய்யாக குறிப்பிடப்பட்ட மனைவியின் பெயரை நீக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அதற்க்கு கார்மேகக் குழலி என்ற பெயரில் இருக்கும் பெண் ஒருவரின் உதவி தேவைப்படுகிறது.
அந்தப் பெயரைக் கொண்ட ஒரு செய்தித் தொலைக்காட்சி நிருபரின் (ரித்திகா சிங்) உதவியை நாடுகிறார். சில தயக்கங்களுக்குப் பின் காந்திக்கு உதவுகிறார் கார்மேகக் குழலி.
ஆனால் அந்த உதவி அவருக்குக் பயனளிக்காமல் போகிறது. அத்தோடு மேலும் சில சிக்கல்கள் வருகின்றன. அவற்றிலிருந்து காந்தி எப்படி மீள்கிறார், லண்டனுக்கு சென்றாரா இல்லையா, கார்மேகக் குழலிக்கு என்ன ஆனது என்பதையெல்லாம் திரையில் காண்க.
இந்தப் படத்தின் ஒரு பாதியின் நீளத்துக்கும், மணிகண்டனின் முந்தைய இரு படங்களின் ஒட்டுமொத்த நீளத்துக்கும் சில நிமிடங்கள்தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் அந்த நீளத்தை இடைவெளியிலும் படம் முடிந்தபின்னும்தான் உணர முடிகிறது. அந்த அளவுக்கு ரசிக்கத்தக்க நகைச்சுவை, சமுதாய அவலங்கள் மீதான பகடி, நெகிழவைக்கும் உணர்ச்சிகரமான காட்சிகள் ஆகியவற்றால் நிரம்பிவழிகிறது திரைக்கதை.
உண்மையும் நேர்மையுமே சிறந்த குணங்கள், நேர்வழியை விட குறுக்கு வழி கடினமானது, சிக்கல்கள் நிறைந்தது என நல்ல செய்திகளையும் துளியும் பிரச்சார நெடியில்லாமல், கதைக்குத் தொடர்பில்லாமல் துறுத்திக்கொண்டு இருப்பது போன்ற உணர்வைத் தராமல் சொல்லிச் செல்கிறது படம்.
நாயகனுக்கு உதவுபவராக வரும் நேசன் என்ற பாத்திரத்தின் மூலம் புலம்பெர்யர்ந்த இலங்கைத் தமிழர்களின் அவல நிலையும் படத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதைவைத்து செண்டிமெண்டைக் கசக்கிப் பிழியாமல் அந்தப் பாத்திரத்தை மற்றவர்கள் போல் சாதாரணமானவராகக் காண்பித்துக் கடைசிக் காட்சியில் பார்வையாளரை நெகிழவைத்துவிட்டார்கள்.
அதேபோல் சென்னையில் வாடகைக்கு வீடுதேடுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அடாவடி ஆகியவை குறித்த காட்சிகளும் வசனங்கள் ரசிகர்களின் கைதட்டல்களையும் விசில்களையும் அள்ளுகின்றன.
பல இடங்களில் கைதட்டி சிரிக்க வைத்தும சிலஇடங்களில் மனமார நெகிழவைத்திருக்கும் அரிதான மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக இதைச் சொல்லலாம். படத்தின் கதையை அருள் செழியன் என்பவர் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதியவர்களாக மணிகண்டன், அன்புச்செழியன், அணுசரண் என மூவரின் பெயர்கள் வருகின்றன. இவர்கள் மூவருக்கும் இந்தப் பாராட்டுகள் உரித்தாகுக.
கதை-திரைக்கதையில் குறைகளே இல்லை என்று சொல்வதற்கில்லை. இரண்டரை மணி நேரத் திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்படுகிறது. சில இடங்களில் சற்று சுவாரஸ்யம் மட்டுப்படுகிறது. ஆனால் மற்ற நிறைகளை வைத்துப் பார்க்கும்போது இந்தக் குறையைத் தாராளமாக மன்னிக்கலாம்.
கதை, திரைக்கதைக்கு மற்றவர்களின் துணையை நாடி அதற்கான அங்கீகாரத்தை சரியாகக் கொடுக்கும் மணிகண்டன் ஒரு இயக்குனராகவும் நம்பிக்கைதரும் இளைஞர்களில் முன்னணியில் இருக்கிறார்.
கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர் தேர்வில் அவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவு படத்தின் நாயக-நாயகியர் முதல் சின்னச் சின்ன வேடங்களில் நடித்திருப்பவர்கள் வரை அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை இயக்கம் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களும் சிறப்பாக வந்திருக்கின்றன.
விஜய் சேதுபதிக்கு இது இந்த ஆண்டின் ஐந்தாவது படம். மற்ற நான்கு படங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது. நல்லவனாக, உண்மையானவனாக வாழ விரும்பினாலும் சூழ்நிலையால பொய்களைச் சொல்லி அதனால் சங்கடத்தில் மாட்டிக்கொண்டு நெளியும் கதாபாத்திரத்தை வழக்கம்போல் சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு இடத்தில்கூட மிகை என்றோ குறை என்றோ சொல்ல முடியாத அளவு கச்சிதமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
மிக சாதாரண மனிதராகத்தான் படத்தில் அறிமுகமாகிறார். படம் முழுக்க அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுடன் ரசிகர்களால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிகிறது. ஆனால் படம் முடியும்போது ஒரு கதாநாயகனாக உயர்ந்து நிற்கிறார். கடைசிக் காட்சியில் அவருக்கு விழும் கைதட்டல்களும் விசில் சத்தமும், பாத்திரத்தின் வலிமையாலும் திரைக்கதையாலும் குறையற்ற நடிப்பாலும் அவர் படத்திலேயே கதா நாயகத்தன்மைக்கு உயர்ந்துவிட்டதைப் பிரதிபலிக்கின்றன.
இவரைப் போன்ற நடிகர்கள் முன்னணி நாயகராக இருப்பது தமிழ் சினிமாவின் வருங்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
ரித்திகா சிங்குக்கு முதல் படத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். நவீன சிந்தனைகள் கொண்ட முற்போக்கான, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் நிருபர், பாத்திரம் குறித்த இத்தனை தகவல்களை இங்கு குறிப்பிடக் காரணம் இவை அனைத்தையும் சிறப்பாக உள்வாங்கி கச்சிதமாக நடித்திருக்கிறார் என்பதால்தான். இறுதிக் காட்சியில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரனில் மனதை அப்படியே கொள்ளைகொள்கிறார். இந்த ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு ரித்திகா சிங் என்று சொல்லலாம்.
முதல் பாதியில் சிரிப்பு சரவெடிகளைக் கொளுத்திப்போட்டுக்கொண்டே இருக்கும் யோகி பாபு, இரண்டாம் பாதியில் இரண்டே காட்சிகளில் வந்தாலும் எமோஷனல் நடிப்பிலும் தன்னால் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார். நாடகக் குழு நடத்துபவராக வரும் நாசர் வழக்கம்போல் பாத்திரத்துக்கு கண்ணியம் சேர்க்கிறார். நேசன் என்ற இலங்கைத் தமிழர் பாத்திரத்தில் வரும் நடிகர் குறிப்பிட்டுப் பாராட்டத்தக்க நடிப்பைத் தந்திருக்கிறார்.
வீட்டு ப்ரோக்கராக வரும் சிங்கம்புலி படத்தின் நகைச்சுவை அம்சத்துக்கு வலு சேர்க்கிறார். அவர் வரும் காட்சியிலெல்லாம் தியேட்டர் சிரிப்பலையில் மூழ்குகிறது.
நாயகியின் அம்மா, பாஸ் போர்ட் அலுவலக அதிகாரியாக வரும் சீனு மோகன், பெண் நீதிபதி, நாயகனுக்கு உதவும் சீனியர் வக்கீல், அவரது உதவியாளராக நடித்திருக்கும் வினோதினி, நாயகனின் அக்காவாக நடித்திருப்பவர், மாமாவாக வரும் வெங்கடேஷ், நாடகக் குழுவில் இருக்கும் நாயகனின் நண்பன், அவரது தோழியாக வரும் பூஜா தேவரியா, நாயகியின் அம்மா, நாயகனின் ஹவுஸ் ஓனராக வருபவர், அவரது மனைவி, போலி சான்றிதழ் நிறுவனம் நடத்துபவராக வரும் எஸ்.எஸ்.ஸ்டான்லி, அந்த நிறுவனத்தில் வேலைபார்க்கும் முதியவர், பாஸ் போர்ட் குற்றத்தை விசாரிக்க வரும் மலையாள அதிகாரி, என அனைவரும் பாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை சிறப்பாகத் தந்திருக்கிறார்கள்.
கேவின் பின்னணி இசை காட்சிகள் ஏற்படுத்த வேண்டிய உணர்ச்சிக்கு சரியாகத் துணைபுரிகிறது, கதையோட்டத்துடன் ஒட்டி வரும் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருப்பதோடு கருத்தாழமிக்க பாடல்வரிகளைக் கொண்டிருக்கின்றன.
என். ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்துக்குத் தேவையான யதார்த்தத்தன்மையைத் தருக்கிறது.
நடுவில் ஒரு அரை மணிநேரக் காட்சிகளில் சற்று தொய்வடைந்தது போன்ற உணர்வு வருகிறது. படத்தொகுப்பாளர் எம்.அனுசரண் இதைக் கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம். இது அவரது தவறு மட்டுமா என்று தெரியவில்லை. மற்றபடி அவரது பணியில் குறையொன்றும் இல்லை.
அண்மைக் காலங்களில் இரண்டு மணி நேரப் படங்கள் அதிகரித்துவிட்டதால் இரண்டரை மணி நேரங்களுக்கு ஓடும் இந்தப் படம் நீளமானதாக இருப்பதுபோன்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை.
படத்தில் போலி சான்றிதழ்கள் மூலம் வெளிநாடு செல்ல முயற்சிப்பதால் வரும் பிரச்சனைகள், நாயகனின் நேர்மை கேள்விக்குள்ளாவது தொடர்பான சிக்கல் என இரண்டு அடுக்குகள் உள்ளன. இவை இரண்டுக்கும் உள்ள தொடர்பை இன்னும் வலுவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
இதுபோன்ற குறைகள் எல்லாம் படம் முடிந்தபின் தான் நினைவுக்கு வருகின்றன. அதுவே படத்தின் மிகப் பெரிய சிறப்புதானே?
மொத்தத்தில் சிரிக்கவைத்து, நெகிழவைத்து இவற்றோடு, உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பதன் அவசியத்தையும், குறுக்கு வழியில் செல்வது ஆபத்தும் சிக்கல்களும் நிறைந்தது எனபதையும் வலிமையாக உணர்த்தியிருக்கும் ஆண்டவன் கட்டளை` அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய சிறந்த படம் என்று பரிந்துரைக்கிறோம்.
மதிப்பெண்- 4/5
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout