விஜய் சேதுபதியின் 50வது படம் குறித்த மாஸ் தகவல்.. ரசிகர்கள் உற்சாகம்..!
- IndiaGlitz, [Saturday,April 15 2023]
நடிகர் விஜய் சேதுபதி 50வது படம் என்ற மைல் கல்லை நெருங்கி இருக்கும் நிலையில் அந்த படத்தில் ஒரு புதுமை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த 1996 ஆம் ஆண்டு முதலே சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி ’தென்மேற்கு பருவக்காற்று’ என்ற படத்தின் மூலம் நாயகனாக உருவானார். அதன் பிறகு அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவரது 50வது படத்தை நிதிலன் என்பவர் இயக்கி வருகிறார். ஏற்கனவே ’குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கிய இவர் விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் வித்தியாசமான இரண்டு கெட்டப்புகளை கொடுத்துள்ளதாகவும் இதுவரை விஜய் சேதுபதி நடிக்காத கெட்டப்புகள் என்றும் கூறப்படுகிறது.
இது ஒரு பழிவாங்கும் வித்தியாசமான கதை என்றும் இந்த படத்தில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள இரண்டு வித்தியாசமான கெட்டப் நிச்சயம் ரசிகர்களுக்கு கவரும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுதன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை 85 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஏற்கனவே 50 நாட்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் விஜய் சேதுபதியின் காட்சிகள் மட்டும் இன்னும் 10 நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக நடிகர்களின் 50வது படம் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படும் நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.