விஜய்யின் 'தெறி' டிரைலர் விமர்சனம்
- IndiaGlitz, [Monday,March 21 2016]
இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாடல்கள் வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு நேற்று சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தின் டீசருக்கு அகில இந்திய அளவில் ஏற்பட்ட மாபெரும் வரவேற்பினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் நேற்று வெளியான டிரைலர் அதைவிட இருமடங்கு வரவேற்பினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றைய விழாவில் இயக்குனர் அட்லி பேசியதைபோலவே இந்த டிரைலரில் மூன்றுவிதமான தோற்றத்தில் விஜய் தோன்றுகிறார். ஒன்று ரொமான்ஸ்விஜய், மற்றொன்று மாஸ் விஜய் மூன்றாவதாக விஜய் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே தெரிந்த பாச விஜய். இந்த மூன்று தோற்றங்களிலும் விஜய் அசத்தியுள்ளார் என்றே கூற வேண்டும். விஜய் மகளாக நடித்திருக்கும் நைனிகாவுடன் மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கும் டிரைலர் போகப்போக காதல், காமெடி, ஆக்சன் என நகர்கிறது.
சமந்தாவுக்கு இந்த படம் ஒரு முக்கிய படமாக கண்டிப்பாக அமையும். அழகு மற்றும் இளமையுடன் சமந்தா ஃபேமிலி கெட்டப்பில் வருகிறார். எமிஜாக்சனின் தோற்றம் முற்றிலும் வித்தியாசமாகவும் இதுவரை அவர் வெளிப்படுத்தாத அளவில் நடிப்பிலும் ஜொலிக்கிறார். மகேந்திரன் தோற்றம் 'அக்னி நட்சத்திரம்' வில்லன் உமாபதியை ஞாபகப்படுத்துகிறது. அவருடைய நீண்ட அனுபவம் இந்த கேரக்டருக்கு நிச்சயம் வலிமை சேர்த்திருக்கும்.
50வது படம் என்பதால் ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார் என்பது தெரிகிறது. பாடல்கள் அனைத்துமே தெறிக்க வைக்கும்படி உள்ளதால் நிச்சயம் ஒவ்வொரு பாடலும் திரையில் தோன்றும் போது அதிர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஜார்ஜ் வில்லியம்ஸின் கேமரா பணிகள் சர்வதேச தரத்தில் உள்ளது. குறிப்பாக பேருந்து ஒன்று பாலத்தில் விழும் காட்சி நிச்சயம் பெரிய திரையில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். இரண்டு நிமிட டிரைலரை ரூபன் எடிட்டிங் செய்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. இந்த விழாவில் கலைப்புலி தாணு அவர்கள் கூறியதுபோல் அட்லியின் இயக்கத்தில் ஒரு ஷங்கரும் ஒரு முருகதாஸும் இணைந்த ஒரு கலவை தெரிகிறது. தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பிரமாண்ட இயக்குனர் கிடைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
மொத்தத்தில் விஜய்யின் 'தெறி' நிச்சயம் கில்லி'க்கு பின்னர் நீண்ட நாள் பேசக்கூடிய ஒரு படமாக அமையும் என்றே தெரிகிறது