சீனா, ஜப்பானில் விஜய்யின் 'புலி' ரிலீஸ்?
- IndiaGlitz, [Saturday,August 01 2015]
இந்திய சினிமா வரலாற்றில் ஒருசில திரைப்படங்கள் மட்டுமே சீன மற்றும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு திரையிடப்பட்டுள்ளது. அவற்றில் அமீர்கானின் '3 இடியட்ஸ்' மற்றும் 'பிகே' ஆகியவை அடங்கும். தற்போது உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்ற 'பாகுபலி' திரைப்படத்தையும் சீன மற்றும் ஜப்பான் மொழியில் டப் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் முதன்முதலாக ஒரு நேரடி தமிழ்ப்படம் சீன, ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெருமைக்குரிய திரைப்படம் விஜய்யின் 'புலி' என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்த 'புலி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளோடு இந்தியிலும் டப் செய்து வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் படக்குழுவினர் 'புலி' படம் ரிலீசான பின்னர், அந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, இந்த படத்தை சீனா மற்றும் ஜப்பானிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் சரித்திரம் சம்பந்தப்பட்ட திரைப்படங்களை பார்ப்பதில் அந்நாட்டு ரசிகர்கள் பெரும் ஆர்வம் கொண்டவர்கள். உலக தரத்தில் அமைக்கப்பட்டு வரும் புலி' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் சரித்திரக்கதை ஆகியவை சீன, ஜப்பானிய ரசிகர்களை பெரிதும் கவரும் என்றே படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், விஜய்யின் படம் உலக அளவில் பேசப்படும் என்பது உறுதி.