விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் ஏன்? மோடி நடவடிக்கையால் சுறுசுறுப்பானாரா?

  • IndiaGlitz, [Saturday,September 16 2023]

தளபதி விஜய் விரைவில் அரசியலில் குதிக்க போகிறார் என்று கூறப்படும் நிலையில் அதற்கு ஏற்றவாறு அவர் தனது காய்களையும் நகர்த்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களில் பிடித்த தமிழக முழுவதும் உள்ள மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களுக்கு விருந்தளித்து சிறப்பு பரிசுகளும் அளித்தார். இதனால் அவர் இளைய தலைமுறை வாக்குகளை கவர்ந்து விட்டதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி மறைந்த முன்னாள் தலைவர்கள் சிலைகளுக்கு தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டதிலிருந்து அவர் அரசியலுக்கு தயாராகி விட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி விஜய் விழியகம், விஜய் பயிலகம், விஜய் மினி கிளினிக் என சமூக தொண்டுகளும் நடந்து வருகிறது.

விஜய்யின் குறிக்கோள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல் தான் என்று இருக்கும் நிலையில் இப்போது முதலே அவர் அவசர அவசரமாக ஏன் அரசியல் காய்களை அகற்றி வருகிறார் என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. பிரதமர் மோடி வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்த திட்டமிட்டு உள்ளார்.

ஒருவேளை ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தால் அப்போதே தேர்தலை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக தான் விஜய் இப்போது முதல் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விஜய் அரசியலுக்கு வரவிருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.