அரசியல் கட்சிக்கு விஜய் அழைப்பு விடுக்கும் நபர்கள்.. ஆரம்பமே ஆச்சரியம்..!
- IndiaGlitz, [Friday,February 02 2024]
பொதுவாக ஒரு பிரபல நடிகர் கட்சி ஆரம்பித்தால் உடனே அந்த கட்சியில் சேர்வதற்கு பிற கட்சியில் உள்ள பிரபலங்கள் வருவார்கள். புதிய கட்சியில் இணைந்தால் நமக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும், அதுமட்டுமின்றி ஆட்சியைப் பிடித்தாலும் நமக்கு பதவிகள் கிடைக்கும் என்ற நப்பாசையில் அரசியல்வாதிகள் வருவதுண்டு.
இதற்கு முன் கட்சி ஆரம்பித்த நடிகர்களும் அவ்வாறு கட்சி மாறி வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர். ஆனால் இந்த தவறை நடிகர் விஜய் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விஜய்யின் ஆரம்பமே அசத்தலாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் தனது கட்சிக்கு பிற அரசியல் கட்சிகளிலிருந்து வரும் அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் மகளிர், ஒடுக்கப்பட்டோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகள் நடத்திவரும் நிர்வாகிகள், சமூக அக்கறை உள்ளவர்கள் ஆகியவர்களை தன்னுடைய கட்சியில் இணைந்து தன்னோடு செயல்படுமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே இதுவரை அங்கீகாரம் இல்லாமல் சமூக சேவைகளை சத்தமின்றி செய்து வந்த பல தன்னார்வலர்கள் விஜய் கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்கள் விஜய் கட்சியில் இணைந்தால் மற்ற கட்சிகளை விட தனித்தன்மையாக இந்த கட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் முதல் நகர்வே வித்தியாசமாக இருப்பதை அடுத்து அவர் கண்டிப்பாக தேர்தலில் அவர் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.