தமிழக மக்களுக்கு மேலும் ஒரு இலவச சேவை.. தவெக நிர்வாகிகளுக்கு விஜய் பிறப்பித்த உத்தரவு..!
- IndiaGlitz, [Monday,May 20 2024]
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த கட்சியின் சார்பாக பல இலவச சேவைகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இலவச சட்ட உதவி சேவை, இலவச நூலகம் உள்பட பல்வேறு சேவைகள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மற்றொரு முக்கிய சேவை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஒரு காவல் நிலையத்திற்கு இரண்டு வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வழக்கறிஞர்கள் கட்சி பிரச்சனை மற்றும் பொது மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இலவச சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது ஒவ்வொரு காவல் நிலையத்திற்கு இரண்டு வழக்கறிஞர்களை நியமனம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கறிஞர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மீது வழக்கு தொடரப்பட்டால் அவர்கள் ஆஜர் ஆவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை தேவை என்றாலும் இந்த வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த அறிவிப்பு வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத புதுமையான அறிவிப்பு என்று கூறப்பட்டு வருகிறது.