ரஜினி படத்தை நெல்சன் இயக்க விஜய் காரணமா? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான ’தலைவர் 169’ திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்ததே தளபதி விஜய்யால்தான் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான நெல்சன், அதன் பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கினார். இந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு விஜய் நடிக்கும் ’பீஸ்ட்’ படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் ’பீஸ்ட்’ படம் ரிலீசாகும் முன்பே ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’ படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் நெல்சன் ’பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது விஜய்யுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது ரஜினி படம் குறித்து நெல்சன் விஜய்யிடம் கூறியதாகவும் அப்போது ரஜினிக்கு கதை சொல்ல தன்னை விஜய் தான் ஊக்குவித்தார் என்றும் கூறியுள்ளார்.

ரஜினிக்கு கதை சொல்ல தனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து விஜய் தன்னை மிகவும் மோட்டிவேட் செய்ததாகவும், விஜய் கொடுத்த தைரியத்தில்தான் ரஜினிக்கு கதை சொல்லி அந்த வாய்ப்பை தான் பெற்றதாக இயக்குனர் நெல்சன் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.