கூட்டணி குறித்த முக்கிய தகவல்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு!
- IndiaGlitz, [Tuesday,February 08 2022]
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தலில் திமுக அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் போட்டியிடுகின்றன என்பதும் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 கவுன்சிலர்களுக்கு மேல் வெற்றி பெற்ற விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுகின்றனர் என்பதும் சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்கள் ஒரு சிலர் அரசியல் கட்சிகளோடு இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியான நிலையில் இது குறித்து விளக்கமளித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாட்டில் நடைபெறும் 2022ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தளபதி அவர்களின் உத்தரவுபடி தளபதி விஜய் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி ஆதரவு இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. எனவே தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள், அனைத்து மாவட்ட தலைவர்களும், அணித் தலைவர்களும், ஒன்றிய நகர பகுதி தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்களும், ரசிகர்களும் முழுமூச்சுடன் பிரச்சாரம் செய்து தளபதி மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மூலமாக செய்த நற்பணிகளை மக்களிடத்தில் கொண்டு சென்று, நம் இயக்கத்தின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் மூலம் தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.