விஜய் மக்கள் இயக்கம் கேட்ட சூப்பர் சின்னம்: தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,January 29 2022]
ஊரக உள்ளாட்சி தேர்தலை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கம் முடிவு செய்திருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஒரே சின்னமாக தேர்தல் ஆணையத்தில் கேட்டதாகவும் அதற்கு தேர்தல் ஆணையம் கூறிய பதில் குறித்த தகவலும் தற்போது வந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட விஜய் அனுமதி அளித்ததாகவும், அது மட்டுமின்றி தனது புகைப்படம் மற்றும் தனது இயக்கத்தின் கொடியை பயன்படுத்தவும் விஜய் அனுமதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதனை அடுத்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தங்களது இயக்கத்திற்கு ஒரே சின்னமாக ஆட்டோ சின்னம் வழங்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வலியுறுத்தினார்கள்.
ஆனால் அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால் ஒரே சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்ததாகவும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்கள் தான் விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் மக்கள் இயக்கம் கேட்ட ஆட்டோ சின்னம் சூப்பர் சின்னம் என்றும் அந்த சின்னம் கிடைத்தால் கண்டிப்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள் என்றும் விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.