தூத்துகுடி துப்பாக்கி சூடு: தளபதி விஜய் எடுத்த அதிரடி முடிவு

  • IndiaGlitz, [Sunday,June 10 2018]

சமீபத்தில் தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐநா உள்பட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சி தலைவர்கள், கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு கோலிவுட் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலர் நேரில் ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில் சமீபத்தில் எந்தவித ஆரவாரமும் இல்லாமல், பத்திரிகைகளுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கி சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார் தளபதி விஜய். அதுமட்டுமின்றி மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும் செய்தார்.

இந்த நிலையில் தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் தமிழகமே சோகமயமாக உள்ள நிலையில் இந்த வருடம் தனது பிறந்த நாளையும் விஜய் கொண்டாட போவதில்லை என்ற முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இம்மாதம் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளை மிகச்சிறப்பாக கொண்டாட விஜய் ரசிகர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அவருடைய இந்த மனிதாபிமான முடிவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.