விஜய்யின் தவெக முதல் மாநாடு தேதி, இடம் இதுதான்.. முக்கிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது கட்சியின் கொடி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது தெரிந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தவெக பொதுச்செயலாளரின் மனுவில் கூறியிருப்பதாவது:

நான் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கழகப் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம். விக்கிரவாண்டியை அடுத்த வி. சாலை கிராமத்தில் ( 23.09.2024) அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் எங்கள் கட்சித் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கலந்து கொள்கிறார்.

மாநாடு நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம். எங்கள் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தையும் முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்லும் பாதையில் இடது புறம் சுமார் 28 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் தென் பகுதியில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே பாதையில் வலது புறம் சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம். இதில் தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இருச் சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு வாடகைக்கு பெற்றுள்ளோம்.

மாநாட்டிற்கு வரும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் எளிமையாக கூட்ட நெரிசலின்றி வந்து செல்வதற்கு வசதியாக மாநாட்டுத் திடலில் இருந்து உள்ளே செல்வதற்கான மூன்று வழிகளும், வெளியே செல்வதற்கான மூன்று வழிகளும் அமைக்க திட்டமிட்டுள்ளோம். மாநாட்டிற்கு வரும் அனைவருக்கும் முறையான உணவு வசதி, தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இவற்றுடன் தேவையான ஆம்புலன்ஸ் வேன்களும் அங்கு நிறுத்தப்பட உள்ளது. தீயணைப்புத்துறையின் அனுமதியும், பாதுகாப்பும் கோரவுள்ளோம்.