'தல' தயாரிப்பில் 'தளபதி' விஜய்: கோலிவுட் ஆச்சரியம்

தல தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து கோலிவுட் திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

தளபதி விஜய் தற்போது ’தளபதி 66’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பதையும் பார்த்தோம். மேலும் ஜூன் 22ஆம் தேதி ’தளபதி 67’ படத்தின் முறையான அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில் தல என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் தோனி தற்போது திரைப்படங்கள் தயாரிக்கும் திட்டத்தில் இருக்கிறார். அவருடைய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் விஜய் நடிக்க உள்ளதாகவும், ‘தளபதி 68’ திரைப்படத்தை அனேகமாக அந்த நிறுவனம் தான் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனியும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் தல மற்றும் தளபதி ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் அளித்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.