ரோல்ஸ்ராய் கார் வழக்கு: விஜய்யின் மேல்முறையீட்டு மனு விசாரணை எப்போது?
- IndiaGlitz, [Wednesday,July 21 2021]
விஜய்யின் ரோல்ஸ்ராய்ஸ் கார் வரிவிதிப்பின் மேல்முறையீட்டு மனு நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
தளபதி விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தனி நீதிபதி விசாரித்த நிலையில் மனுவை தள்ளுபடி செய்ததோடு விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். அது மட்டுமின்றி விஜய் குறித்து அவர் ஆட்சேபணைக்குரிய சில கருத்துக்களை தெரிவித்தார். இந்த கருத்து குறித்து முன்னாள் நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தனி நீதிபதி கூறிய ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து விஜய் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை இந்த மனு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நீதிபதிகள் துரைசாமி மற்றும் ஹேமலதா ஆகியோர் கொண்ட அமர்வு நாளை விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் விஜய்க்கு சாதகமாக தீர்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.