ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிறதா விஜய்யின் மாஸ்டர்?

ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் மே மூன்றாம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிலையங்கள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றும் இன்னும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு திரையரங்குகள் திறக்கப்படாது என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனையடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ள சின்ன பட்ஜெட் படங்கள் அமேசான் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் இந்த முடிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

ஆனால் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தால் இன்னும் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளிவர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்த லட்சுமி பாம்’என்ற பெரிய பட்ஜெட் திரைப்படமே ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவது திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படமும் ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கசிந்தது. ஆனால் இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில் ’விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை வெளியிடுவது தொடர்பாக இதுவரை எந்த ஓடிடி தளத்துடன் பேசப்படவில்லை என்றும் திரையரங்கிற்கு வந்த பின்னரே இந்த படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது எனவே விஜய்யின் ’மாஸ்டர்’ படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.