விஜய் பிறந்த நாளில் சிறப்பு அனுமதி பெற்று திரையரங்கில் ரிலீஸ் ஆகும் 'பிகில்': ரசிகர்கள் உற்சாகம்
- IndiaGlitz, [Wednesday,June 17 2020]
கொரனோ வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீசாக திட்டமிடப்பட்டது. ஆனால் மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் விஜய் பிறந்தநாளின் போது திரையரங்குகளில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படும் என்பதும், அதனை விஜய் ரசிகர்கள் பார்த்து ரசிப்பதும் வழக்கமானது. ஆனால் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி தெருவில் பிறந்த நாள் போஸ்டர் கூட ஒட்ட முடியாத அளவுக்கு சென்னை உள்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி ஜூன் 22ஆம் தேதி முதல் ஜுன் 30 ஆம் தேதி வரை விஜய்யின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ’பிகில்’ படத்தை திரையிட அந்நாட்டு விஜய் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். அந்த வகையில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளின் அரசின் சிறப்பு அனுமதியை பெற்று அரசாங்கத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அந்நாட்டின் திரையரங்குகளில் ‘பிகில்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தகவல் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாட்டில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.