நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு!
- IndiaGlitz, [Monday,March 14 2022]
நடிகர் விஜய் வாங்கிய கார் வழக்கில் அவருக்கு அபராதத் தொகை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் வணிக வரித் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எக்ஸ்5 என்ற காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்தார். இந்த காருக்கு வணிகவரி துறை வரி செலுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி விஜய் தரப்பில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 75 ரூபாய் வரி செலுத்தினார்.
இந்த நிலையில் வரி செலுத்தபடாத இடைப்பட்ட காலத்திற்கான அபராத தொகையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் விஜய் செலுத்த வேண்டும் என வணிகவரித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக விஜய் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.
இதற்கு பதிலளித்துள்ள வணிகவரித்துறை விஜய்யின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் வரி செலுத்தாத 2005 டிசம்பர் முதல் 2021 செப்டம்பர் வரை 189 மாதங்களுக்கு 2 சதவிகித வட்டியாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 650 ரூபாய் வரை செலுத்த உத்தரவிட்டதாகவும் அதற்கு சட்டத்தில் அதிகாரம் உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படுமா? என்பது தீர்ப்பில் தான் தெரியவரும்.