விவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்!

  • IndiaGlitz, [Sunday,April 18 2021]

விவேக்கின் ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் ரசிகர்கள் சபதம் ஏற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று உடல்நலக்குறைவால் காலமான விவேக் அவர்கள் அப்துல் கலாம் அய்யாவின் வேண்டுகோளின்படி ஒரு கோடி மரம் நட முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வந்தார் என்பதும் அந்த வகையில் மொத்தம் அவர் 33 லட்சத்திற்கும் மேலான மரங்களை நட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் அவர் ஒரு கோடி மரம் என்ற இலக்கை எட்டி விடுவார் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு எதிர்பார்த்த நிலையில் திடீரென நேற்று எதிர்பாராத வகையில் காலமாகிவிட்டார். இதனால் அவரது ஒரு கோடி மரம் என்ற கனவு நனவாகாமல் போய்விட்டது.

இந்த நிலையில் விவேக்கின் ஒரு கோடி மரக் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் மக்கள் இயக்கத்தினர் சபதம் எடுத்துள்ளனர். இதனை அடுத்து அவர்கள் மரம் நடும் பணியையும் தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக்கின் கனவை விஜய் ரசிகர்கள் நிறைவேற்றுவார்கள் என்று அனைவரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.