கத்திக்குத்தில் முடிந்த அஜித்-விஜய் ரசிகர்களின் சண்டை

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

அஜித், விஜய் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் சண்டை நடப்பது என்பது அன்றாட நிகழ்வுகளில் ஒன்று. இருதரப்பினர்களும் சண்டை போடாத நாளே இல்லை என்ற நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களையும் கடந்து ஒருவருக்கொருவர் நேரிலும் சண்டை போட ஆரம்பித்துவிட்டனர்.

சென்னை புழல் அருகே அஜித் ரசிகரான உமாசங்கர் என்பவர், விஜய் ரசிகரான ரோஷன் என்பவரிடம் நடிகர் விஜய் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரோஷன், உமாசங்கரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரோஷன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்து உமாசங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த உமாசங்கரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் உமாசங்கரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்ததை தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார் ரோஷனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஒரு சினிமா நடிகரை நடிகராக மட்டும் பார்த்து அவரது நடிப்பை ரசிப்பதோடு இன்றைய இளைஞர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஒரு சினிமா நடிகருக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை வீணடித்து கொள்ள வேண்டாம் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.