வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி!

  • IndiaGlitz, [Sunday,June 21 2020]

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் சீன நாட்டின் ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி நுழைந்தனர். இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

சீன நாட்டின் ராணுவ வீரர்கள் இந்திய எல்லையை கடந்து ஊடுருவியதை தடுப்பதற்காக இந்திய வீரர்கள் மோதியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 43 வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த மோதலில் முதல் கட்டமாக 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், அதன்பின் காயமடைந்த 17 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்ட மூவரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்பவர் ஆவார்.

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் சேவை செய்து வந்த நிலையில் சீன எல்லையில் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்தார். அவரது உடல் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யபப்ட்டது. வீரமரணம் அடைந்த பழனி அவர்களுக்கு தமிழக முதல்வர் உள்பட தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கால்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பழனி குடும்பத்தினர்களுக்கு தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்திய எல்லையை காக்க வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு விஜய் மக்கள் இயக்கம் செய்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.