அஜித் ரசிகருக்கு போய் சேர்ந்த விஜய் கொடுத்த உதவித்தொகை ரூ.5000!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வறுமையில் வாடும் தனது ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா 5,000 ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் தனது டிரஸ்ட் மூலம் நேரடி அனுப்பினார் என்பதும் தெரிந்ததே. இதன் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பலன் அடைந்தனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் அனுப்பிய ரூபாய் 5000 உதவித்தொகையை மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர் நாகராஜ் என்பவர் தனது நண்பரும் அஜித் ரசிகருமான சசிகுமார் என்பவருக்கு வழங்கியுள்ளார். மாற்றுத்திறனாளியான அஜித் ரசிகர் சசிகுமார் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானம் இன்றி இருப்பதை அறிந்த விஜய் ரசிகர் நாகராஜ், தனக்கு விஜய் அனுப்பிய ரூ.5000 பணத்தை அப்படியே சசிகுமாருக்கு கொடுத்துவிட்டார்.

எனது நண்பர் அஜித் ரசிகர் சசிகுமார் என்னைவிட கஷ்டப்படுவதால் எனக்கு தளபதி அனுப்பிய பணத்தை அவருக்கு கொடுத்துவிட்டேன். இதற்காக விஜய் ரசிகன் என்ற முறையில் நான் பெருமைப்படுகிறேன் என்று நாகராஜ் கூறியுள்ளார். எனவே விஜய் தனது ரசிகர்களுக்காக அனுப்பிய ரூ.5000 பணம் அஜித் ரசிகர் ஒருவருக்கும் போய் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவலை விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.