விஜய்யின் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு போஸ்டர் வைரல் 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தி அதனிடம் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி செய்து வந்த போதிலும் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் இந்தியாவில் 6 லட்சத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சுமார் 5000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கேரள அரசு தீவிர ஏற்பாடு செய்து வருகிறது

அந்த வகையில் தற்போது கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் போஸ்டர் ஒன்று அம்மாநிலத்தில் வைரலாகி வருகிறது. பிகில் திரைப்படத்தில் உள்ள ராயப்பன் கேரக்டர் விஜய்க்கு மாஸ்க் அணிந்தவாறு உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பதும், அதில் உள்ள கொரோனா வைரஸ் குறித்த வாசகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் விஜய்யின் ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருப்பதை கணக்கில் கொண்டு இந்த போஸ்டர் அங்கு முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.