24 வருட திரைவாழ்க்கையில் விஜய்யின் ஏற்ற இறக்கங்கள்....
- IndiaGlitz, [Tuesday,June 21 2016]
இளையதளபதி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் கடந்த 1992ஆம் ஆண்டு 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் அறிமுகனார். அவர் திரையுலகிற்கு வந்த இந்த 24 வருடங்களில் அதிகபட்ச உச்சத்தையும், அதிகபட்ச பிரச்சனைகளையும் சந்தித்துள்ளார். சுடசுடத்தான் பொன் மென்மேலும் ஒளிர்வதை போல விஜய் பிரச்சனைகளை சந்திக்க சந்திக்கத்தான் பிரபலமானார். அவர் இந்த 24 வருடங்களில் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.
தனது 18வது வயதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய 'நாளைய தீர்ப்பு என்ற படத்தில் ஒரு இளைஞனாக விஜய் அறிமுகமானார். முதல் படம் பெரிய வெற்றியை பெறவில்லை. அவரது தோற்றத்தைக் கிண்டலடித்து சில முன்னணி பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. இன்று அதே பத்திரிகைகள் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று போட்டிபோட்டுக்கொண்டு அறிவிக்கின்றன. விஜய்யின் அசுரத்தனமான வளர்ச்சிக்கு இதுவே மிகச் சிறந்த சான்று.
தொடக்க ஆண்டுகளில் விஜய்யை பிரபலமாக்க வேண்டும் என்பதற்காகவே அவரது தந்தை, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், 'செந்தூரபாண்டி' படத்தில் கேப்டன் விஜயகாந்துடன் விஜய்யை நடிக்க வைத்தார். அவரது கணிப்பு சரியாக இருந்தது. விஜயகாந்த் ரசிகர்கள் உள்பட அனைவருமே விஜய் என்ற நடிகர் இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டனர்.
மூன்றாவது படமான 'ரசிகன்' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது.விஜய்யின் நடிப்பு, ஆக்சன் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் அமைந்த திரைக்கதை, சங்கவியின் கவர்ச்சி ஆகியவை இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன. அதன் பின்னர் விஜய் நடித்த 'தேவா, அஜித்துடன் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே', 'விஷ்ணு', 'சந்திரலேகா', 'கோயமுத்தூர் மாப்ளே' ஆகிய படங்கள் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாதால் விஜய் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில்தான் இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் 'பூவே உனக்காக' படத்தில் நடிக்கும் வாய்ப்பு விஜய்க்குக் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட விஜய், காதல், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் என்று அனைத்து விதமான காட்சிகளிலும் தன் திறமையை முழு அளவில் வெளிப்படுத்தி அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். குறிப்பாக இளம்பெண்கள் அதிக அளவில் விஜய்க்கு ரசிகர்கள் ஆனது இந்த படத்திற்கு பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. காதல் தோல்வி குறித்து கிளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் இன்றளவிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. 1996ஆம் ஆண்டில் வசூலை வாரிக் குவித்த இந்தப் படம் 275 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
'பூவே உனக்காக' வெற்றிக்கு பின்னர் விஜய் தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வந்தார். ஒருசில காதல் படங்கள் தோல்வி அடைந்தாலும் விஜய்யை அனைத்து தரப்பினர்களும் ஒரு நல்ல நடிகராகவும், விநியோகிஸ்தர்கள் மத்தியில் முதலீட்டுக்கு உத்தரவாதம் தரக்கூடிய நடிகராகவும் ஏற்றுக் கொள்ள வைத்த படம் 'காதலுக்கு மரியாதை'. ஃபாசில் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
காதலுக்கு மரியாதை' வெற்றிக்கு பின்னர் விஜய் நடித்த 'நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்” ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஆயினும் 'நெஞ்சினிலே', 'மின்சாரக் கண்ணா', 'கண்ணுக்குள் நிலவு' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் அவருக்கு ஒரு இறங்குமுகம் ஏற்பட்டது. இந்த இறங்கு முகத்தை ஏறுமுகமாக்கியது இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் 'குஷி'
இன்றும் கூட தொலைக்காட்சியில் எத்தனை முறை இந்தப் படத்தை ஒளிபரப்பினாலும் அவரது ரசிகர்கள் தவறாமல் பார்த்து ரசிக்கும் இந்த படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையைக் கொடுத்தது. 'குஷி'யை தொடர்ந்து 'பிரண்ட்ஸ்', ப்ரியமானவளே, 'பத்ரி', 'ஷாஜஹான்', 'தமிழன்', 'யூத்',” என காதல் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் படங்களில் விஜய் மாறி மாறி நடித்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொண்டார். இந்தப் பட்டியலில் கடைசி மூன்று படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அனைத்திலும் பாடல்களும் விஜய்யின் நடிப்பும் பரவலான ரசிகர்களை ஈர்த்தன.
தொடர் ரொமான்ஸ் படங்களுக்குப் பிறகு விஜய்யை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது 'பகவதி'. ஏ.வெங்கடேஷ் இயக்கிய இந்தப் படம் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விஜய்யின் ஆக்ஷன் இமேஜை உயர்த்தியது. தேவா இசையில் பாடல்களும் வெற்றிபெற்றன. அடுத்ததாக விஜய் நடித்த படம் 'வசீகரா'. காதல்-காமடி-செண்டிமெண்ட் அகியவற்றின் சரியான கலவையாக அமைந்த இந்தப் படம் இளைஞர்களையும் குடும்ப ரசிகர்களையும் ஈர்க்கத் தவறவில்லை. பாடல்களும் வெற்றிபெற்றன. எல்லாவற்றுக்கும் மேலாக விஜய்யின் காமடி திறமையை மிகச் சிறப்பாக பயன்படுத்திய படங்களில் இதுவும் ஒன்று. இத்தனை இருந்தும் இந்தப் படமும் என்ன காரணத்தாலோ எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக வந்த 'புதிய கீதை' வித்தியாசமான கதைக்களம். விஜய்யின் சிறந்த நடிப்பு, சூப்பர் ஹிட் பாடல்கள் ஆகியவை இருந்தாலும் வணிக வெற்றிபெறவில்லை.
இவற்றைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானார் விஜய். அப்போது அறிமுக இயக்குனர் ரமணா இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியான 'திருமலை' மிகப் பெரிய வெற்றிபெற்றதோடு விஜய்யின் திரைவாழ்வில் முக்கியமான திருப்புமுனையாகவும் அமைந்தது. விஜய்யை மீண்டும் ஆக்ஷன் பாதைக்குத் திருப்பியது. பஞ்ச் வசனங்கள், அதிரடி ஆக்சன் காட்சிகள் ஆகியவை விஜய்யை பற்றிக்கொண்டது இந்தப் படத்தில் இருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக “வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கிறவன் தோப்பான், தோக்கிறவன் ஜெயிப்பான்” என்ற வசனம் விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கும் பொருந்தும்படி அமைந்தது.
ஆக்சன் பட களத்தில் விஜய் இறங்கிய பின்னர் அவர் நடித்த 'கில்லி, திருப்பாச்சி' படங்கள் அவரை வசூல் நாயகன் அந்தஸ்திற்கு உயர்த்தின. பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த 'போக்கிரி' திரைப்படம் விஜய்யின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றது. விஜய் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என்ற நிலை ஏற்பட்டது 'போக்கிரி' வெற்றிக்கு பின்னர்தான். இந்த மூன்று படங்களுமே 'பிளாக்பஸ்டர்' என்று சொல்லத்தக்க அளவில் வெற்றிபெற்றன. இவற்றுக்குடையில் சிவகாசி என்ற ஆக்ஷன்-செண்டிமெண்ட் படமும் வெற்றிபெற்றது. இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் இயக்கிய 'சச்சின்' ஒரு இடைவெளிக்குப் பின் விஜய் நடித்த காதல் படம். இந்தப் படம் முதலுக்கு மோசம் செய்யவில்லை அதோடு விஜய்யின் அழகான நடிப்புக்காகவும் நகைச்சுவை மற்றும் பாடல்களுக்காகவும் ரசிகர்களின் வரவேற்பைப் பெறத் தவறவில்லை.
'போக்கிரி'யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு 'கில்லி' இயக்குனர் தரணியுடன் 'குருவி' என்ற படத்துக்காக மீண்டும் இணைந்தார் விஜய். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறவில்லை. அதைத் வித்த்தியாசமான முயற்சியும், விஜய் முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடித்த படமுமான 'அழகிய தமிழ் மகன்' படமும் வெற்றிபெறவில்லை. போக்கிரிக்குப் பின் பிரபுதேவாவுடன் மீண்டும் இணைந்த 'வில்லு' படமும் படுதோல்வியடைந்தது. அடுத்ததாக வந்த 'வேட்டைக்காரன்' பரபர ஆக்ஷன் திரைக்கதைக்காகவும் விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் விஜய் ஆண்டனியின் சூப்பர் ஹிட் பாடல்களுக்காகவும் சுமாரான வெற்றிபெற்று சற்று ஆசுவாசம் அளித்தது. இது விஜய்யின் 49ஆவது படம்.
50ஆவது படம் என்பது ஒரு நாயக நடிகரின் திரைவாழ்வில் மைல்கல். அப்படி ஒரு மைல்கல் படமாக அமைந்திருக்க வேண்டிய 'சுறா', விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்து வெற்றிபெறத் தவறியது.
தொடர் தோல்விகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரேக் கொடுக்கும் படமாக அமைந்தது 'காவலன்' திரைப்படம். 'ஃப்ரெண்டஸ்' இயக்குனர் சித்திக்குடன் விஜய் மீண்டும் இணைந்த இந்தப் படம் விஜய்யின் நடிப்புத் திறமை மிகச் சிறப்பாக வெளிப்பட்ட படங்களில் ஒன்று. ஆக்ஷன், பஞ்ச் வசனங்கள் பேசி மாஸ் ரசிகர்களை ஈர்ப்பதில் மட்டுமல்லாமல், காதல், காமடி, செண்டிமெண்ட் போன்ற அம்சங்களிலும் சிறப்பான நடிப்பை வழங்கி பெண்களையும் நடுத்தர வயது ரசிகர்களையும் ஈர்க்கும் வல்லமையும் விஜய்க்கு உண்டு என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக நிரூபித்த படம் இது.
2012ஐ விஜய்யின் திரைவாழ்வில் மிக முக்கியமான ஆண்டு என்று சொல்லலாம். தமிழ் சினிமா வரலாற்றில் பெரிதும் மதிக்கப்படும் இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஷங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரோடு இணைந்த விஜய்யின் படங்கள் இவ்வாண்டில் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடுபோட்டதோடு விமர்சகர்களின் பரவலான பாராட்டையும் பெற்றன.
ஷங்கர் இயக்கிய 'நண்பன்' இந்தியில் ஆமீர் கான் நடிப்பில் வெளியான 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் ரீமேக். இந்தப் படத்தின் போது 35 வயதைக் கடந்திருந்த விஜய் ஒரு பொறியியல் கல்லூரி மாணவன் வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். பாத்திரத்துக்குத் தேவையான மிகச் சிறந்த எமோஷனல், காதல் மற்றும் காமடி கலந்த நடிப்பையும் வழங்கி விமர்சகர்களைப் பாராட்ட வைத்தார். 'விஜய் ஒரு மசாலா நாயகன்', அவருக்கு நடிக்கத் தெரியாது, அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் பொருந்தமாட்டார்” என்று சொன்னவர்கள் மூக்கில் விரலைவைத்து தங்கள் கருத்தை மாற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
'துப்பாக்கி' திரைப்படம் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவருக்குமே பெரிய அந்தஸ்தை கொடுத்தது. தமிழ் சினிமாவில் ரஜினி படங்களை அடுத்து அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'துப்பாக்கி' படம் பெற்றது. மேலும் இந்த படம் ரூ.100 கோடி கிளப்பிலும் இணைந்தது.அதோடு இந்திய நாட்டின் தீவிரவாத அச்சுறுத்தல், ராணுவத்தினரின் தியாகம் ஆகியவை பற்றிய அழுத்தமான படைப்பாகவும் அமைந்து விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது.
'துப்பாக்கி' படத்திற்கு பின்னர் விஜய் நடித்த படம் என்றால் பிரமாண்ட ஓப்பனிங் வசூல் கொடுக்கும் படம் என்று விநியோகிஸ்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இதன் பின்னர் விஜய் நடித்த 'கத்தி', 'ஜில்லா' ஆகிய படங்கள் நல்ல வசூலையும் 'தலைவா', புலி' ஆகிய படங்கள் சுமாரான வசூலையும் கொடுத்தன. 'தலைவா' பல சிக்கல்களைக் கடந்து தமிழகத்தில் தாமதமாக வெளியானதால் எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. புலி' படம் வித்தியாசமான ஃபேண்டஸி முயற்சி என்று பாராட்டப்பட்டாலும் பலத்த எதிர்பார்ப்புக்கு தீனி போடாததால் வணிக வெற்றி பெறவில்லை.
அதற்குப் பின் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் விஜய்தான் என்பதை நிரூபித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'தெறி'. இந்த படத்தின் வசூல், படக்குழுவினர்களே எதிர்பார்க்காத அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன இந்த படம் செங்கல்பட்டு ஏரியாவில் திரையிடப்படாத நிலையிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக்ஷன், செண்டிமெண்ட், காதல், காமடி என்று அனைத்து விதமான நடிப்பிலும் தான் கில்லி என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய். இந்தப் படத்தில் ஐந்து வயது குழந்தைக்கு அப்பாவாக முதிர்ச்சியான நடிப்பை வழங்கியிருந்தார் விஜய்.
வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வருவது திரையுலகில் உள்ள அனைவருக்குமே கிடைக்கும் அனுபவம்தான். ஆனால் தோல்விகளை கண்டு துவளாமல் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவை போல் எழுந்து அடுத்தடுத்து வெற்றியை கொடுப்பவர் விஜய். இதைக் கிட்டத்தட்ட அனைத்து தரப்பினர்களும் ஒப்புக்கொகின்றனர்.
தமிழ்த்திரையுலகில் ஒரு தமிழர் உச்சத்தை பெற்றுள்ளது தமிழர்களான நாம் அனைவருமே பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாளை பிறந்தநாள் கொண்டாடவுள்ள விஜய்க்கு எங்களது உளம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை கூறிக்கொள்வதோடு விஜய் இன்னும் பல வெற்றி படங்களில் நடிக்க அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.
விஜய்யின் இந்தப் பயணம் மேன்மேலும் தொடர, அவர் மேலும் பல சாதனைகள் புரிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...