கார் வரி விவகாரம்: நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு!
- IndiaGlitz, [Saturday,July 17 2021]
விஜய் வாங்கிய வெளிநாட்டு கார் வரி விவகாரம் குறித்த தீர்ப்பு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அளித்த நிலையில் அந்த தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்து விஜய் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிலிருந்து விஜய், ரோல்ஸ் ராய் கார் ஒன்றை வாங்கினார். அந்த காருக்கு அவர் இறக்குமதி வரி செலுத்தி விட்ட நிலையில் நுழைவு வரி செலுத்தவில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், அதனால் விஜய் நுழைவு வரி கட்ட வேண்டும் என்றும், அதுமட்டுமின்றி வழக்கு தொடர்ந்தற்காக ரூபாய் ஒரு லட்சம் அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும் விஜய் குறித்து ஒரு சில விமர்சனங்களையும் தனி நீதிபதி தெரிவித்தார். இந்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய் குறித்து தனி நீதிபதியின் விமர்சனம் குறித்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், முன்னாள் நீதிபதிகள் வழக்கறிஞர் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் விஜய் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தனி நீதிபதியின் தீர்ப்பில் தன்னைப்பற்றி பதிவு செய்த விமர்சனங்களை நீக்கவேண்டும் என்றும், அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பிலிருந்து மேல்முறையீடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனு இரண்டு நீதிபதிகள் அமர்வு முன் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.