விஜய் ஆண்டனியின் 'எமன்'. திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ஹீரோவாக மாறி 'நான்', 'சலீம்', 'இந்தியா பாகிஸ்தான்', 'பிச்சைக்காரன்' மற்றும் 'சைத்தான்' ஆகிய தொடர் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பெரிய ஸ்டார் நடிகர்களே தொடர் வெற்றியை ருசிக்க முடியாத நிலையில் விஜய் ஆண்டனி தொடர் வெற்றியை கொடுத்துள்ளார் என்றால் அதற்கு அவர் தேர்வு செய்யும் கதையே முக்கிய காரணம் என்று கூறினால் அது மிகையாகாது.. தன்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று அவர் நம்பும் கதையை தேர்வு செய்து சரியான டீமை உருவாக்கி அதனுடன் கடின உழைப்பையும் கொட்டியதால் அவருக்கு இந்த தொடர் வெற்றி கிடைத்துள்ளது. இந்நிலையில் விஜய் ஆண்டனியின் ஆறாவது படமாகிய 'எமன்' வரும் வெள்ளியன்று வெளியாகிறது. இந்த படம் குறித்த முன்னோட்டத்தை பார்ப்போம்
தன்னை திரையுலகில் ஹீரோவாக அறிமுகம் செய்த இயக்குனர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் மீண்டும் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தான் 'எமன்'. இதுவரை சொந்த படங்களில் நடித்து கொண்டிருந்த விஜய் ஆண்டனி முதன்முதலாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் முதல் படமும் இதுதான்.
'இன்று நேற்று நாளை', வெற்றிவேல், ஒருநாள் கூத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த மியா ஜார்ஜ், இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் முதன்முறையாக ஜோடி சேருகிறார். ஏற்கனவே ஜீவா சங்கர் இயக்கிய 'அமரகாவியம்' படத்தில் நடித்திருந்த மியாஜார்ஜ் இரண்டாவது முறையாக அதே இயக்குனர் படத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் மியாஜார்ஜ், 'அஞ்சனா' என்ற நடிகையின் கேரக்டரில் நடிக்கின்றாராம். மேலும் இந்த படத்தில் மியாஜார்ஜுக்கு ஒரு சோலோ பாடலும் உண்டாம்
மேலும் பழம்பெரும் நடிகர் தியாகராஜன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அதுமட்டுமின்றி சமீப காலமாக வில்லன் மற்றும் குணசித்திர வேடத்தில் கலக்கி வரும் ஜி.மாரிமுத்து, சார்லி உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வழக்கம் போல் விஜய் ஆண்டனி இசையமைக்க இயக்குனர் ஜீவாசங்கரே ஒளிப்பதிவு துறையையும் கவனிக்க, வீரசெந்தில்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இதுதான் 'எமன்' படத்தின் சிறப்பான டீம்
சென்னையின் பல பகுதிகளில் இந்த படத்தின் பெரும்பால படப்பிடிப்புகள் நடைபெற்றுள்ளது. புதுச்சேரியில் ஜெயில் செட் போட்டு ஒருசில காட்சிகளும், மும்பை மற்றும் ஜார்ஜியாவில் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஐந்து பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகி உள்ளது என்பது இந்த படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் ஆக கருதப்படுகிறது. குறிப்பாக 'எம்மேல கைய வச்சா காலி' என்ற பாடல் தினமும் அனைத்து எப்.எம்களில் ஒலித்து கொண்டே இருக்கின்றது.
பொதுவாக அரசியல் திரைப்படம் என்றாலே விறுவிறுப்புக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. அதுவும் இந்த படம் தற்கால அரசியலை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளதால் இந்த படம் பெரும் வரவேற்பை பெறும் என்றே நம்பப்படுகிறது. சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த படத்தில் மெயின் வில்லனாக, அரசியல்வாதியாக நடித்துள்ள தியாகராஜன் கூறியபோது, 'சில வருட கால இடைவேளைக்கு பிறகு நடிக்க முடிவு செய்த நான், என்னுடைய கதாபாத்திரங்களை மிக கவனமாக தேர்வு செய்து வருகிறேன். ஒரு சில கதைகளை கேட்ட அடுத்த கணமே, நாம் அதில் நடித்தாக வேண்டும் என்று நமக்கு தோன்றும். அப்படி எனக்கு கேட்ட மாத்திரத்திலேயே அவ்வாறு என் மனதில் தோன்றிய திரைப்படம் தான் எமன்`. எதிர்பாராத திருப்புமுனைகளை உள்ளடக்கி, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் எமன்` திரைப்படத்தில் நான் ஒரு முக்கியமான அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். நல்ல வலுவான கதையம்சமத்தோடு ஜீவா சங்கர் உருவாக்கி இருக்கும் இந்த எமன்` திரைப்படம் மூலம், நிச்சயமாக விஜய் ஆண்டனி மேலும் உயரத்தை எட்டுவார்.
இந்த படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியையும் அடையாளப்படுத்துவது போல என்னுடைய கேரக்டர் இல்லை. நானும் என்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சில் எந்த அரசியல்வாதியையும் குறிப்பிடும்படியாக நடிக்கவில்லை. ஆனால் இதுவரையிலும் தமிழில் வந்திருக்கும் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களிலேயே இந்தப் படம் மிக, மிக வித்தியாசமானதாக இருக்கும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை என்று நடிகர் தியாகராஜன் கூறியுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தி உள்ளது.
ஒரு படத்தின் ரிலீசுக்கு முன்னர் அனைவரும் அந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலரை மட்டுமே வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் விஜய் ஆண்டனி. இதேபோல் 'எமன்' படத்தின் நான்கு நிமிட காட்சிகளை வெளியிட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த நான்கு நிமிட காட்சிகளே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியுள்ளது விஜய் ஆண்டனியின் ஐடியாவுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.
இன்னும் பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவரவுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் இதுவே போதும் என்று நினைக்கின்றோம். வரும் வெள்ளி அன்று இந்த படத்தின் விமர்சனத்தின்போது இன்னும் விரிவாக தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com