இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தா? விஜய் ஆண்டனி விளக்கம்..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது இயேசு குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அந்த அமைப்பு கூறியிருந்ததாவது:

’திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி அவர்களுக்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் கடும் கண்டனம். உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி, மதம், மொழிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரன் ஆகிய இயேசு கிறிஸ்து. கிறிஸ்தவர்களையும் இயேசு கிறிஸ்துவையும், இழிவுபடுத்தும் விதமாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துக்கு ஒப்பிட்டு இயேசு கிறிஸ்து மது குடித்தார் என்று பொதுவெளியில் பேசி, கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அந்த கிறிஸ்துவ அமைப்பிற்கு பதில் கூறியுள்ள விஜய் ஆண்டனி கூறியிருந்ததாவது: அன்பார்ந்த கிறிஸ்தவ சபை கூட்டமைப்பின் உருப்பினர்களே, வணக்கம். நான் முன்தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது, இயேசு பிரான் பயன்படுத்தி இருக்கிறார், என்று கூறி இருந்தேன்.

ஒரு பத்திரிகை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து, நான் பேசியதை இணைத்து, தவறாக அர்த்தபடுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண் பட்டிருக்கிறீர்கள் என்பது, எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவை பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது.