விஜய் ஆண்டனி பர்த்டே ஸ்பெஷல்......! அவரின் சினிமா குறித்த சுவாரசிய தொகுப்பு.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. குமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் 1975-இல் பிறந்த இவர் ஜூலை 24- இன்று தன்னுடைய 46-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
விஜய் ஆண்டனி குறித்த சுவாரசிய தகவல்கள்....!
ஆரம்ப காலகட்டத்தில் ஒலிப் பொறியாளராகப் வேலை பார்த்து வந்தார். இளங்கலை படிப்பை முடித்தபின், தன்னுடைய சொந்த முயற்சியில் ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவச்செய்தார். அங்கு ஆர்வத்துடன் பணியாற்றிய விஜய் ஆண்டனி சில தொலைக்காட்சிகளுக்கும், ஆவணப்படங்களுக்கும் இசைத்துண்டுகளை அமைத்து தந்தார்.
விஜய் ஆண்டனி, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய விஜய்யின் சுக்ரன் திரைப்படம் மூலம் கடந்த 2005-ஆம் ஆண்டு, இசையமைப்பாளராக அறிமுகமானார்.
ஜீவா, சந்தியா நடித்த டிஷ்யூம் படத்திற்கு இசையமைத்த இவர், டைலாமோ டைலாமோ என்று துள்ளல் பாடலையும்,
'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்' என்ற காதல் கீத பாடலையும் கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவனம் ஈர்த்தார்.
முதன்முதலாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் இப்படத்திற்க்காக வாய்ப்பளித்தார். ஆனால் சுக்ரன் படம் முதலாக வெளியானது.
ஜீவன், சினேகா நடித்த "நான் அவனில்லை" திரைப்படம் மாஸ் ஹிட் என்று சொல்லலாம். குறிப்பாக அதில் வந்த "ஏன் எனக்கு மயக்கம், நான் அவன் இல்லை" பாடலால் தாறுமாறாக ஹிட் அடித்தது.
நகுல் நடிப்பில் வெளியான 'காதலில் விழுந்தேன்' திரைப்படம் தான் விஜய் ஆண்டனியின், இசை வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. 'தோழியா என் காதலியா', 'உனக்கென நான் எனக்கென நீ', 'உன் தலைமுடி உதிர்வதைக் கூட தாங்க முடியாது அன்பே' உள்ளிட்ட காதல் ரசம் சொட்டும் பாடல்களும், 'நாக்க முக்க' என்ற குத்துப்பாடலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பெரும்பாலானோரை ரசிக்க வைத்தது. குறிப்பாக நாக்க முக்க பாடல் அந்த கால கட்டத்தில் எல்லோர் வாயிலும் முணுமுணுக்கப்பட்ட பாடலாக இருந்தது, இப்பாடலுக்கு பாடலாசிரியராக இருந்தவரும் விஜய் ஆண்டனியே, இதன் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் இவருக்கு ரசிகர்கள் ஆனார்கள்.
பிரபல நட்சத்திரங்களுக்கு, இவர் கொடுத்த வெற்றிப்பாடல்கள்.....!
கடந்த 2009-ஆம் ஆண்டு விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்திற்கு இவர்தான் இசையமைத்திருப்பார். 'கரிகாலன் காலப் போல' என்ற காதல் வர்ணிப்பு பாடலையும், ஒரு சின்னத்தாமரை என்ற மேற்கத்திய இசைப்பாணி கொண்ட பாடலும், புலி உறுமுது என்ற மாஸ் ஹிட் பாடலும், திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விஜய் ஆண்டனி குறித்த கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து 2010-இல், தனுஷ் நடிப்பில் வெளியான உத்தமபுத்திரன் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தார். இதில் வந்த உசுமலரசே குத்து பாடல், கன்னிரெண்டில் மோதி நான் விழுந்தேனே காதல் பாடல், இடிச்ச பச்சரிசி திருமண பாடல் இன்றும் பல பேரின் செல்போன் பாடல் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. அந்த அளவிற்கு பிரமாண்ட ஹிட் கொடுத்தது இப்படத்தின் இசை.
இதேபோல் 2019-ல் விஷால் நடிப்பில் வெளியான வெடி திரைப்படத்தில் வாலி வரிகளில், "இச்சு இச்சு இச்சுக்கொடு" என்ற பாடல் ஹிட் அடித்தது, இவர் இசையமைத்த வித்தியாசமான இசை அனைவரையும் எளிமையாக கவரச் செய்தது.
இதன்பின் விஜயின் வேலாயுதம் படம் மூலம், மீண்டும் ரீ-என்ட்ரீ கொடுத்தார். சில்லாக்ஸ் என்ற ஆட்டம் போட வைக்கும் பாடலும், மாயம் செய்தாயோ காதல் பாடல் உள்ளிட்ட இசைக்கோர்ப்புகள், இவரின் தனித்திறமையை தமிழ் சினிமாவிற்கு எடுத்துக் காட்டின.
அங்காடித்தெரு படத்தில் 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை' , எங்கே போவேனோ உள்ளிட்ட 2 பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து கவனம் பெற்றார்.
பாடகராக தனித்துவம் பெற்றது எப்படி...!
பொதுவாக அனைத்து இசையமைப்பாளர்களும், அவரவர் இசையமைக்கும் படங்களில் பாடலை பாடுவது இயல்பான ஒன்றாகும். ஆனால் விஜய் ஆண்டனி பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் என்று சொல்லலாம்.
சாத்திக்கடி போத்திக்கடி, டைலாமோ, பூமிக்கு வெளிச்சமெல்லாம், நாக்கு முக்க, இச்சு இச்சு, சொன்னா புரியாது, நூறு சாமிகள் இருந்தாலும் என இவர் பாடிய பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் குரலில் உள்ள ஈர்ப்பும், தனித்தன்மையும், அனைத்து வகையான பாடல்களுக்கும் பொருத்தும் குரல் வளமும், தான் பாடல்கள் வெற்றிபெற காரணமாகும். வித்தியாசமான இசைக்கோர்ப்புகள், மாறுப்பட்ட ஒலி போன்றவை தான், இவரின் தனித்துவ இசைக்கு காரணமாகும்.
நாயகனாக படங்களில் ஜொலித்தது.....!
கடந்த 2012-ல் நான் என்ற திரில்லர் படத்தில், கதாநாயகனாக அறிமுகமான விஜய் ஆண்டனி, முதல் படம் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயர் பெற்றார். சினிமா விமர்சகர்கள் மத்தியில் பாராட்டையும், நேர்மையான விமர்சனங்களையும் பெற்றார். அடுத்து இவர் நடிப்பில் வெளியான சலீம் படமும், ஓரளவு வெற்றியை பெற்றுத்தந்தது.
இதன்பின் அம்மா, மகன் கதையம்சம் கொண்ட "பிச்சைக்காரன்" திரைப்படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, பெருவாரியான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களால் பாராட்டப்பட்டார். பாக்ஸ் ஆபிசிலும் தாறுமாறாக வசூல் செய்து குவித்தது. இதைத்தொடர்ந்து சைத்தான், யமன், காளி, திமிரு பிடிச்சவன், அண்ணாதுரை, இந்தியா பாகிஸ்தான் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார்.
மூடர் கூடம் நவீன் இயக்கத்தில், அக்னிச் சிறகுகள் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவரே இயக்கி, பிச்சைக்காரன்-2 படத்தில் நடித்து வருகிறார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்ச் வசனம், குத்தாட்டம், மாஸ் காட்சிகள் இல்லாமல், இயல்பான கதைகளில் நடித்து, சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டவர். முக்கியமாக நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களையும், இசை, நடிப்பு, பாடல் போன்ற துறைகளிலும் வெற்றி பெற்று வரும் விஜய் ஆண்டனியை, ரசிகர்களுக்கு பிடிப்பதற்கு காரணம், அவரின் மரியாதையான நன்னடத்தையே. இனி வரும் காலங்களில் இவர் மென்மேலும் வளர்ந்து, பல விருதுகளை குவிக்க வேண்டும். தன்னுடைய 46 அகவையை கடக்கும் மாபெரும் நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout