பேனர் கலாச்சாரம்: அஜித் ரசிகர்களை அடுத்து விஜய் அதிரடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Sunday,September 15 2019]
சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரம் காரணமாக பரிதாபமாக பலியான சம்பவம் பலரை விழிப்புணர்வு கொள்ளச் செய்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இனிமேல் தங்கள் கட்சி தொண்டர்கள் பேனர் வைக்க கூடாது என்று கண்டிப்புடன் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். நீதிமன்றமும் கொதித்தெழுந்து பேனர் கலாச்சாரத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மதுரை அஜித் ரசிகர்கள் அஜித் திரைப்படங்கள் வெளியாகும் போதும் சரி, அஜித் பிறந்தநாள் உள்பட பல விழாக்கள் நடைபெறும் போதும் சரி, இனிமேல் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். இதேபோல் மற்ற மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை அடுத்து தற்போது நடிகர் விஜய்யும் இதுகுறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரும் 22ஆம் தேதி சென்னையில் ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளதை அடுத்து இந்த இசை வெளியீட்டு விழாவின் போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது என்று அவர் தனது ரசிகர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். மேலும் பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதே ரீதியில் அனைத்து மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டால் தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் ஒழிந்துவிடும் என்றே கருதப்படுகிறது.