'மாஸ்டர்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி மற்றும் ஷிமோகா ஆகிய பகுதிகளில் முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படம் குறித்து கூறுகையில் ’கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி அவர்களின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது என்றும், இன்னும் 10 நாட்களில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், விஜய் அவர்களும் விஜய்சேதுபதி அவர்களும் சேர்ந்து நடிக்கும் காட்சி எங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கும் என்றும் இந்த படப்பிடிப்பை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் இப்போதைக்கு இந்த படம் குறித்து இவ்வளவு தான் சொல்ல முடியும் என்றும் கூறினார்.

லோகேஷ் கனகராஜ் ’மாஸ்டர்’ படம் குறித்த இந்த தகவலை கூறியதும் அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி திரைப்படத்திற்காக ’ஃபேவரேட் இயக்குனர் விருதை பெற்றார். இந்த விருதை கமலஹாசன் லோகேஷ் கனகராஜூக்கு கொடுத்து கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.