தமிழ் இனத்திற்காக ஒன்று சேர்ந்த அஜீத்-விஜய் ரசிகர்கள்
- IndiaGlitz, [Saturday,July 11 2015]
தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினிக்கு பிறகு மாஸ் நடிகர்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். இரு நடிகர்களின் ரசிகர்களும் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டாலும், சில ஆக்கபூர்வமான பணிகளை இரு நடிகர்களின் ரசிகர்களும் இணைந்து செய்வதுண்டு என்பதை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம்.
அஜீத் பிறந்த நாளுக்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும், விஜய் பிறந்த நாளில் அஜீத் ரசிகர்கள் அன்னதானம், ரத்ததானம் ஆகியவற்றை நடத்துவதையும் பார்த்துள்ளோம். இந்நிலையில் தமிழ் இனத்தின் ஒரு பிரச்சனைக்காக அஜீத், விஜய் ரசிகர்கள் ஒன்றிணைந்து செயலாற்றி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதை நிரூபிக்க ஐ.நா.மன்றம் பத்து லட்சம் வாக்குகளை கேட்டுள்ளது. உலகில் பல கோடி தமிழர்கள் வாழ்ந்து வரும் நிலையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பத்து லட்சம் வாக்குகள் இன்னும் கிடைக்கவில்லை. இதற்கு சரியான விழிப்புணர்வு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இந்த பிரச்சனையை கையில் எடுத்த அஜீத்-விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இன்னும் ஆறுநாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் தற்போது சுமார் ஒன்பது லட்சம் வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் தற்போது அஜீத், விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளதால் இன்னும் ஓரிரண்டு நாட்களில் பத்து லட்சம் வாக்குகளை தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு படத்தின் டீசர் வெளியாகும்போது போட்டி போட்டுக்கொண்டு அந்த டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காண்பிக்க முயற்சி செய்யும் ரசிகர்கள் இதுபோன்ற ஆக்கபூர்வமான விஷயத்தில் இணைந்து செயலாற்றுவது ஆரோக்கியமான செயலாக கருதப்படுகிறது.