வரிக்காக அல்ல, மேல்முறையீடு செய்வது இதற்காகத்தான்: விஜய் வழக்கறிஞர்!
- IndiaGlitz, [Friday,July 16 2021]
விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அவருக்கு தனது கண்டனத்தையும் அறிவுரையும் தெரிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
நீதிபதியின் தீர்ப்பில் உள்ள சில கருத்துக்கு முன்னாள் நீதிபதிகளும், அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் தங்களது கருத்தை கூறி வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் விஜய் தரப்பிலிருந்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் எஸ். குமரேசன் அவர்கள் கூறியிருப்பதாவது:
வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்டதாக இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார்
சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
இந்த மேல்முறையீடு கூட வரி கட்ட கூடாது என்பதற்காகவோ அல்லது அபராதம் செலுத்த கூடாது என்பதற்காகவும் கிடையாது. ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை எதிர்த்து மேல்முறையீடு. இவ்வளவு காரசாரமான தமது கருத்துக்களை தெரிவிக்க கூடாது என்பதுதான் எங்கள் வாதம். அதனை சட்டப்படி எதிர்கொள்வோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்