விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா? பிரபல தயாரிப்பாளர் கேள்வி

  • IndiaGlitz, [Tuesday,March 20 2018]

தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவின்படி மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் வெளியீடு இல்லை என்றும், மார்ச் 16ஆம் தேதியில் இருந்து படப்பிடிப்புகள் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை வேலைநிறுத்தத்திற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டதால் வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள் விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது மற்ற தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படம் மட்டுமின்றி மேலும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் சிறப்பு அனுமதி பெற்று நடைபெற்று வருவதாக தெரிகிறது.

இதுகுறித்து ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் சதீஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் படத்தின் படப்பிடிப்பு விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிறது. எங்கே போனது ஒற்றுமை? எந்த வகையில் இந்த படப்பிடிப்பிற்கு சிறப்பு அனுமதி கொடுத்தது தயாரிப்பாளர் சங்கம்? இந்த முடிவை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். சங்கத்தை துண்டாக்க வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார். இதனால் திரையுலகினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.