நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய ரொமான்ஸ் பாடல்

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் நயன்தாராவுக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ரசம் சொட்ட சொட்ட ஒரு பாடல் எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

நயன்தாரா நடித்து கொண்டிருக்கும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா'. இந்த படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் 6 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இதில் ஒரு பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், 'ஒரே ஒரு' என்று தொடங்கும் ரொமான்ஸ் பாடலான இந்த பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகி ஜோனிதா இந்த பாடலை பாடியுள்ளார்.

இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய 'கலயான வயசு' என்ற பாடல் யூடியூபில் சுமார் 2 கோடிக்கும் மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதிய இந்த பாடலும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, விஜய் டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.