ரஜினி-விக்னேஷ் சிவன் சந்திப்பு! அடுத்த படத்தை இயக்குகிறாரா?

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நேற்று ரஜினியை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்கவுள்ளதாகவும், இதுகுறித்து சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவனும் சந்தித்திருப்பதால் ரஜினியை இயக்க காத்திருக்கும் இயக்குனர்கள் பட்டியலில் இவருடைய பெயரும் இணைந்துள்ளது.

ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் என வரிசையாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவனுக்கும் தனது படத்தை இயக்க வாய்ப்பு கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.