எஞ்சாய் எஞ்சாமி' சர்ச்சை: விளக்கம் அளித்த விக்னேஷ் சிவன்
- IndiaGlitz, [Wednesday,August 03 2022]
கடந்த சில நாட்களாக எஞ்சாய் எஞ்சாமி’ சர்ச்சை நீண்டுகொண்டே இருக்கிறது என்பதும் இதற்கு ஒவ்வொருவரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்து வருகின்றனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இதுகுறித்து இயக்குனர் விக்னேஷ் சிவனும் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் 'எஞ்சாய் எஞ்சாமி’ பாடல் பாடப்பட்ட போது அந்த பாடலை பாடியவர்களில் ஒருவரான தெருகுரல் அறிவு பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறப்பட்டது
இதுகுறித்து தெருகுரல் அறிவு தனது சமூக வலைத்தளத்தில் நீண்ட பதிவு செய்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகி தீ ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வழிநடத்திய இயக்குனர் விக்னேஷ் சிவன் இது குறித்து கூறியிருப்பதாவது:
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பலமுறை அறிவை அழைத்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்றார். எனினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு கூட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என்றே கூறினோம். ஆனால், அவரால் வர முடியவில்லை.
நான் அறிவின் ரசிகன். அவர் திறமைசாலி. ஆகவே, அப்பாடலில் அறிவு இடத்தில் நாங்கள் யாரையும் மாற்றாக பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்தியல் வேறுபாடும் இல்லை’ என்று கூறியுள்ளார்.