விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த முதல்வர் ஸ்டாலின்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த சில காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்தியாவில் முதல்முறையாக அதிலும் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதனை அடுத்து இந்த போட்டியில் 180க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்திய அணியின் பட்டியலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டியின் தொடக்க விழா நடைபெற இருக்கும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பிக் போட்டியின் விளம்பர படமொன்றை இயக்கி வருகிறார். இந்த விளம்பர படத்தின் ஒருசில காட்சிகளில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்துள்ளார். முதல்வர் நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை நேப்பியர் பாலத்தில் நடைபெற்றதாகவும் அவர் நடித்த காட்சியை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாகவும் தகவல்கள் வெளியாகின

மேலும் இந்த விளம்பர படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் என்பதும் இந்த விளம்பரப் படம் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த 1988ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி கதை வசனம் எழுதிய ‘ஒரே ரத்தம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ‘குறிஞ்சி மலர்’ என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.