கொரோனா பரப்பியதாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை?
- IndiaGlitz, [Tuesday,September 07 2021]
உலகம் முழுவதும் கொரோனா பரவல் ஓயாத நிலையில் சில நாடுகள் இன்னும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்றை வைத்திருந்த வியட்நாம் தற்போது கொரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையை 4.80 லட்சம் ஆக அதிகப்படுத்தி உள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வியட்நாமில் கடந்த ஆண்டு ஜனவரியில் கொரோனா பரவல் ஆரம்பித்த போதே அரசு தீவிரமாகச் செயல்பட்டு கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. இதனால் ஆண்டு முழுவதும் பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை. கடந்த ஏப்ரல் வரை இந்த பரவல் எண்ணிக்கை ஒரு சில ஆயிரங்களில்தான் இருந்துள்ளது. ஆனால் தற்போது கட்டுப்பாடுகளை மதிக்காமல் மக்கள் செயல்படுவதால் 4.80 லட்சமாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் ஹோ சி மின் நகரத்தில் இருந்து கா மவ் நகரத்துக்கு வந்த லீ வான் ட்ரை (28) எனும் இளைஞர் இடம்பெயர்ந்த பிறகும் 21 நாட்கள் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் ஊர் முழுவதும் சுற்றித் திரிந்துள்ளார். இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மதிக்காமல் இருந்த குற்றத்திற்காக அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல கொரோனா விதிமுறைகளை மீறிய 2 பேருக்கு தலா 18 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் 2 ஆண்டு இடைநீக்கம் செய்யப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் கொரோனா விதிமுறைகளை மீறும் பொதுமக்கள் மீது அரசாங்கம் வெறுமனே அபராதம் விதிக்கும் நடைமுறையைத்தான் இதுவரை பின்பற்றி வருகின்றன. சில நேரங்களில் வழக்குப் பதிவும் செய்யப்படுகிறது. இப்படி இருக்கையில் கொரோனா விதிமுறைகளை மதிக்காமல் இருந்த குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.