பெண்ணாக இருப்பதையே வெறுத்தேன்? ‘அஜித்‘ பட நடிகை வெளியிட்ட பகீர் கருத்து
- IndiaGlitz, [Friday,July 07 2023]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை ஒருவர் தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள நிலையில் வீட்டில் நான் சிறுமைப்படுத்துவது போன்று உணர்ந்தேன், இதனால் பெண்மையை வெறுத்து ஹார்மோன் பிரச்சனைகளைச் சந்தித்தேன் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே கடும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்துவரும் நடிகை வித்யா பாலன் சஸ்பென்ஸ் திரில்லர் கதையான ‘நீயாட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் ராகுல் போஸ் நடத்திருக்கும் இந்தப் படம் இன்று திரையிடப்பட்டு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்தி சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘பிங்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் ஹெச் வினோத் ‘நேர்கொண்ட பார்வை’ எனும் பெயரில் இயக்கி இருந்தார். இதில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் நடிகை வித்யாபாலன். இவர் இதற்கு முன்பே இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘உருமி’ திரைப்படத்திலும் நடிப்பில் பட்டையைக் கிளப்பி இருந்தார்.
மேலும் ‘கஹானி’, ‘தி டர்ட்டி பிக்சர்ஸ்’ போன்ற திரைப்படங்களில் வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இந்தியா முழுக்கவே பிரபலமாக இருந்துவரும் நடிகை வித்யா பாலன் தனது நீயாட் திரைப்படத்தின் வெளியீட்டை ஒட்டி பல்வேறு நேர்காணல்களில் கலந்து கொண்டுள்ளார். அதில் பேசிய அவர் நான் சிறுவயதில் பெண்மையை வெறுத்து ஹார்மோன் பிரச்சனைக்கு ஆளானேன் என்று கூறியிருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயது நிகழ்வு ஒன்றை பகிர்ந்துகொண்ட நடிகை வித்யா பாலன், நானும் எனது அக்கா பிரியாவும் ஒன்றாக அமர்ந்திருந்தபோது, என்னுடைய மாமா, எனது அப்பாவிடம் சொன்னார்… கவலை படாதே, என் மகன் இருக்கிறான் என்று. இதனால் நானும் எனது அக்காவும் கோபமாக அமர்ந்திருந்தோம். நாங்கள் இருவருமே திறமையானவர்கள்தான். கடவுளால் படைக்கப்பட்ட அற்புதமானவர்கள். ஆனால் என்னுடைய மாமா கூறிய வார்த்தை அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டாலும் அந்தத் தருணத்தில் நான் மிகவும் கோபம் அடைந்தேன். மேலும் எனது பெண்மை உணர்வின் மீது வெறுப்பு கொண்டேன்.
இதனால் நாளடையில் சிறுவர்களுடன் சண்டையிட ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய அம்மாவிற்கு ஒரு மகன் வேண்டும் என்று நினைத்தேன். ஏற்கனவே என்னுடைய அக்கா பிரியா இருப்பதால் என்னை வித்தியாசமாகக் காட்டிக்கொள்ள முயற்சித்தேன். மேலும் சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் என்னை வேறு மாதிரியாக உணர வைத்தது. இதுபோன்ற உணர்வுநிலைகள்தான் எனக்கு ஹார்மோன் கோளாறை ஏற்படுத்தியது. இதனால் பிசிஓடி பிரச்சனையைச் சந்தித்தேன் என்று கூறியுள்ளார்.
சிறுவயதில் பாலின அடையாளத்தால் பாதிக்கப்பட்டதாக நடிகை வித்யா பாலன் பகிர்ந்து கொண்டுள்ள அவரது கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.