ஒரு கிடாயின் கருணை மனு: திரை முன்னோட்டம்
- IndiaGlitz, [Saturday,May 27 2017]
'பாகுபலி 2', '2,0' , சங்கமித்ரா போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் டிரெண்ட் ஆகி வரும் கோலிவுட் திரையுலகில் சிறிய பட்ஜெட் படங்களும் அவ்வப்போது வெளியாகி நல்ல வரவேற்பையும் லாபத்தையும் விருதுகளையும் குவித்தது உண்டு. அதற்கு உதாரணமாக 'காக்கா முட்டை' படத்தை கூறலாம். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கையா தற்போது 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற சிறிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்திய திரையுலகில் பிரமாண்டமான, பெரிய பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் தயாரித்த ஈராஸ் நிறுவனம், இந்த படத்தை முதன்முதலாக சிறிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
விதார்த் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ரவீனா நாயகியாக நடித்துள்ளார். எமிஜாக்சன் உள்பட பல முன்னணி ஹீரோயின்களுக்கு பின்னனி குரல் கொடுத்தவர் தான் இந்த ரவீனா. இவர்களுடன் கவிஞர் விக்கிரமாதித்தன், ஜித்தன் மோகன், ஹலோ கந்தசாமி, சக்தி சரவணன், ஜெயராஜ், ஆரஞ்சுமிட்டாய் ஆறுமுகம் உள்பட பலர் நடித்துள்ளனர். மணிகண்டனின் பல குறும்படங்களுக்கு இசையமைத்த ரகுராம், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்கள் தான் கதையாக உள்ளது. இந்த பயணத்தில் ஒரு புதுமாப்பிள்ளை, புதுப்பெண், அவர்கள் வளர்க்கும் ஆடு ஆகியோர் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக கூறியிருப்பதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தலைப்பை வைத்து கோவில்களில் ஆடு வெட்டுவது தவறு என்று சொல்வதாக நினைத்து கொள்ள வேண்டாம் என்றும், ஆனால் அதே நேரத்தில் ஒரு கிடாய் வைக்கும் கருணை மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்பதை விவரிக்கும் படம் தான் இது' என்று இயக்குனர் கூறியுள்ளார்.
இந்த படம் சமீபத்தில் நியூயார்க் நகரில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு வாழும் இந்திய வம்சாவழியினர் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். அதுமட்டுமின்றி இந்த படத்தை பார்த்த சர்வதேச படக்குழுவினர்களும் 'தமிழர்களுக்கு உலக அளவில் பெருமை சேர்க்கும் படமாக இந்த படம் அமையும் என்று வாழ்த்து தெரிவித்தனர்.
ரிலீசுக்கு முன்னரே சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற இந்த படம் வரும் ஜூன் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.