வற்றியது.. உலகப் புகழ் பெற்ற விக்ட்டோரியா நீர் வீழ்ச்சி. ஆப்ரிக்காவில் வரலாறு காணாத வறட்சி.
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நதியான ஜம்பேசி (Zambezi) நதியிலுள்ள விக்டோரியா நீர்வீழ்ச்சி ஜிம்பாப்வே, ஜாம்பியா நாடுகளின் எல்லையில் 1.7 கிலோமீட்டர் அகலத்துக்கு, 108 மீட்டர் உயரத்துக்கு அமைந்துள்ளது. அக்டோபர் 2018-ம் ஆண்டிலிருந்து சிறிது சிறிதாக வற்றத் தொடங்கிய இந்த நீர்வீழ்ச்சி இப்போது கிட்டத்தட்ட முழுமையாக வற்றிவிடும் நிலையில் வந்து நிற்கிறது. இன்னும் அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால் தன் இருப்பைத் தக்கவைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. அங்கு அப்படியொரு நீர்வீழ்ச்சியே இல்லாமல் போய்விடுமோ என்கிற அளவுக்குப் பெரிய வறட்சியை அது சந்தித்துக்கொண்டிருக்கிறது.
தெற்கு ஆப்பிரிக்காவின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய மிகப்பெரிய சுற்றுலாத் தலம், இன்று நூற்றாண்டு காணாத வறட்சியில் சிக்கிச் சிதைந்துகொண்டிருக்கிறது. 1855-ம் ஆண்டு விக்டோரியா நீர்வீழ்ச்சியைப் பார்த்த ஐரோப்பிய ஆய்வாளர் டேவிட் லிவிங்ஸ்டன் `தேவதைகளைக் காணத் தகுந்த இடம்' என்று வர்ணித்தார். இயற்கை என்னும் தேவதையின் மொத்த அழகையும் அது தன்னகத்தே கொண்டிருந்ததால், அந்த நீர்வீழ்ச்சியை அவர் அப்படி வர்ணித்தார். அன்று அப்படியொரு அழகுக் களஞ்சியமாகத் திகழ்ந்த பகுதி, இன்று சீரழிந்து இல்லாமலாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் இப்போதைய அதிர்ச்சியளிக்கக்கூடிய உண்மை. 60 ஆண்டுகளாக அதில் வந்துகொண்டிருந்த நீரின் அளவு இப்போது மிகக் குறைந்துவிட்டது. நீர்வீழ்ச்சியின் பெரும்பகுதி வறண்டுவிட்டது. இந்த நிலை இன்னும் சில மாதங்களுக்கு அல்லது அடுத்த ஆண்டு முழுவதுமேகூட நீடிக்கலாமென்று கணிக்கப்படுகிறது.
அக்டோபர் 1-ம் தேதி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ``கிட்டத்தட்ட அனைத்து ஓடைகளும் நதிகளும் வறண்டுவிட்டன. ஜிம்பாப்வே-ஜாம்பியா எல்லையிலுள்ள கரீபா நீர்த்தேக்கம் மூன்று மீட்டருக்கும் கீழே குறைந்துவிட்டது. மொத்த நாடுமே மிகக் கொடிய தண்ணீர்ப் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கின்றது" என்று குறிப்பிட்டது.
இந்த வறட்சிக்குக் காலநிலை மாற்றம்தான் காரணமென்று காலநிலை விஞ்ஞானிகள் ஒருபுறம் சொல்லிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் சில விஞ்ஞானிகள் வறட்சி எத்தனையோ ஆண்டுகளாகவே வந்துகொண்டிருக்கிறது. அதில் சில நேரங்களில், மோசமான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படியிருக்க, அதற்கு முழுக்க முழுக்கக் காலநிலை மாற்றத்தையே குற்றஞ்சாட்ட முடியாது என்றும் கூறுகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments