துணை குடியரசு தலைவருக்கு கொரோனா தொற்று!!! மருத்துமனையில் அனுமதியா???
- IndiaGlitz, [Wednesday,September 30 2020]
துணை குடியரசு தலைவர் வெங்கய்ய நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து தன்னுடைய வீட்டில் அவரே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும் அவருடைய உடல் நிலைக்குறித்து வெளியான சில தகவல்களில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர் நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார் என்பதும் தெளிவுப் படுத்தப்பட்டு இருக்கிறது.
வெங்கய்ய நாயுடுவின் மனைவி ஊஷா அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும் ஆனால் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் கொரோனா பாதிப்பால் வீட்டிலே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் மற்றும் அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்ற தகவல்கள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவின் பரவல் எண்ணிக்கை கடும் பயத்தை ஏற்படுத்துகிறது என நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டென்மார்க் அதிபர் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று ஒரேநாளில் 80,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக இந்தியச் சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த தொற்று எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.