திரைத்துறைக்கு இது நல்லதல்ல.. நயன்தாரா படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன்..!
- IndiaGlitz, [Tuesday,January 16 2024]
நடிகை நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து கருத்து கூறிய இயக்குனர் வெற்றிமாறன், திரையுலகிற்கே இது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படத்தில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இடம் பெற்றதை அடுத்து அந்த படத்தை நீக்குவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து திரை உலகை சேர்ந்த பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன் இது குறித்து கூறிய போது ’சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்படங்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும்.
ஆனால் தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு திரைப்படத்தை புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கு நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கை குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் என்று தெரிவித்துள்ளார்.